கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Remdesivir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Remdesivir லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரெம்டெசிவிர் விரைவில் கைவிடப்படும்: மருத்துவர் தகவல்...

 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்' என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ''ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரெம்டெசிவிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததால், அதைக் கைவிட முடிவு செய்துள்ளோம். தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன,'' எனக் கூறியுள்ளார்.


கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை முறையும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி ஏற்கெனவே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இனி மருத்துவமனைகளுக்கே நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து - முதல்வர் மு.க ஸ்டாலின்...

 பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்து இனி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.




தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலமாக ரெம்டெசிவிர்  மருந்து வழங்கும் முறையை செயல்படுத்துவது குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு. இதுதொடர்பாக அவர் இன்று தலைமைச் செயலகத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாகப் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. மருந்துகளின் கள்ளச்சந்தை விற்பனைப் புகார்களும் வந்தபடி உள்ளன. 



இந்தக் காரணங்களைக் கருத்தில்கொண்டு பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்து இனி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிவைக்கும் செயல்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தவிர்க்கவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



இதன்படி, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.



இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.



இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.



நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும்,



இவ்வாறு முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் கலந்துகொண்டனர்.


>>> செய்தி வெளியீடு எண்: 077, நாள்: 16-05-2021...


ரெம்டெசிவிர், ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...



மக்களின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில், வீட்டுத் தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ரெம்டெசிவிர் மருந்து தேவையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது.


இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இதில் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சிக்கிக் கைதாகின்றனர். இதுகுறித்து திடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருப்பதால் அவ்வாறு பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


“மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராகச் செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.


மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.


எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.


அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.


தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு எனத் தமிழக அரசு தொய்வின்றித் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்”.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns