கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு - டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு...
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது இயற்கை விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...
சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பி.பி.இ., உடை (முழு கவச உடை), வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
சட்டசபை தேர்தல் நடத்துவதால், 'கொரோனா' தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கவும், வலது கையுறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணி நேற்று கூறியதாவது: நம் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 4,427 ஓட்டுச்சாவடிகளில், 22,150 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். இவர்கள், 'கொரோனா' தடுப்புக்கான பி.பி.இ., உடை அணிந்து, பணியில் ஈடுபடுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இருப்பர். இவர்கள், தற்போது வீடு வீடாக, தபால் ஓட்டுச்சீட்டுக்கான படிவங்களை வினியோகிக்கின்றனர்.
தேர்தல் நாளன்று, அதே ஓட்டுச்சாவடியில் பணியில் இருப்பர். மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், 'தெர்மல் ஸ்கேனிங்' செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும், கையுறை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்த பிறகே, ஓட்டு இயந்திர பொத்தானை அழுத்த, வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முக கவசம், பி.பி.இ., உடை, கையுறை ஆகியவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக வாகனங்களில் சென்று சேகரித்து, உரிய முறையில் அழிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், கொரோனா பாதிக்கப்பட்டோர், தபால் ஓட்டளிக்க வசதியாக, வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கப்படுகின்றன. அதை பெற்றுக்கொள்வோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும் ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சிக்கியது ரூ.5.56 லட்சம்: கோவை வடக்கு தொகுதியில், ஜி.சி.டி., கல்லுாரி அருகே, தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியில், இரு சக்கர வாகனத்தில் வந்த கார்த்திகேயன், 5.56 லட்சம் ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தொகைக்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட தொகை, வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஊடகங்களும் கண்காணிப்பு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஊடக கண்காணிப்பு மற்றும் அனுமதி வழங்கும் குழு செயல்பட துவக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன.
அதேபோல், அச்சு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், விளம்பரங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும், விளம்பரங்கள் வெளியிட இக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.போலீசாருக்கு விடுமுறை 'கட்' தேர்தல் பணியில், மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அமைதியான முறையில், தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'சட்டசபை தேர்தல் வருவதால் போலீசாருக்கு விடுமுறை இல்லை. இதுதொடர்பாக, அனைத்து மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். மிகவும் அத்யாவசிய தேவைக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து விழிப்புணர்வு: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 6ல் நடக்கிறது. வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ரங்கோலி கோலமிடுதல், கையெழுத்திடுதல், வாகன ஊர்வலம் போன்றவை நடத்தப்படுகின்றன. கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பு அருகே, பிளக்ஸ் பேனரில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தொகுதி தேர்தல் அலுவலர் சாந்தாமணி, மதுக்கரை தாலுகா தாசில்தார் நாகராஜ் முன்னிலையில் நேற்று நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாலதுரைசாமி, உதவியாளர் மணி மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கையெழுத்திட்டனர்.
அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க - தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை...
தேர்தலுக்கு முன் அழகாக காட்சியளிக்கும் பல பள்ளிகளின் சுவர்கள், தேர்தலுக்கு பிறகு, அசுத்தமடைவதால், வாக்குச்சாவடி மையங்களில், டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், வரும் 6ம் தேதி நடக்கிறது.
ஆளும், எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பிற கட்சிகளும், கூட்டணி அமைத்து, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றன. பொதுக்கூட்டங்களால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட, ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஓட்டுச்சாவடி மையங்களாக அறிவிக்கப்படவுள்ள பள்ளிகள், தேர்தலுக்கு முன், பின் என்ற இருவேறு கோணங்களில் சந்திக்கவுள்ள மாற்றங்கள் குறித்து, ஆசிரியர்கள் பல்வேறு கருத்துகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஓட்டுச்சாவடி மையமாக உள்ள பள்ளியில், வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீஸ், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண், வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் என கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படுவது வழக்கம்.
தேர்தலுக்கு முந்தைய தினம், இரவு இப்பணிகள் நடப்பதால், வகுப்பறை உள்ளே, வெளியே என, எங்கு பார்த்தாலும், நோட்டீஸ்மயமாகவே காட்சியளிக்கும்.தேர்தலுக்கு பின், இதை நீக்கும் போது, சுவர்கள் அசுத்தமாவதோடு, பெயின்ட், பாடத்திட்டம் சார்ந்த படங்கள், எழுத்துக்களும் அழிந்து விடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இச்சுவர்களை மீண்டும் அழகாக்க, உரிய ஆசிரியர்களே மெனக்கெட வேண்டியிருக்கும் எனவும், ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.பல கோடி ரூபாய் தேர்தல் பணிகளுக்காக, செலவிடும் தேர்தல் ஆணையம், இச்சிக்கலுக்கு மாற்றுத்தீர்வு காண வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
ராக்கிப்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை கோமதி கூறுகையில், ''எங்கள் பள்ளி முழுக்க, மாணவர்களை கவரும் வகையில், பாடத்திட்ட கருத்துகளை வரைந்து, வண்ணமயமாக்கி உள்ளோம். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், வகுப்பறை சுவர்கள் பெயின்ட் உரிந்த நிலையில், அசுத்தமாகி விடுகின்றன. இதை புதுப்பிக்க, மீண்டும் செலவு செய்வது வாடிக்கையாகி விட்டது.
இதற்கு பதிலாக, டிஜிட்டல் போர்டு வைக்க தேர்தல் ஆணையம் முன்வரலாம். ஒருமுறை இதை கொள்முதல் செய்தால், அடுத்தடுத்த தேர்தல் பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.அரசுப்பள்ளிகளின் மீது நிஜமான அக்கறை கொண்ட, மாவட்ட தேர்தல் ஆணையரான நமது கலெக்டர், இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிக்கலாமே!
(ஓட்டுச்சாவடி மையமாக உள்ள பள்ளியில், வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீஸ், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண், வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் என கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படுவது வழக்கம்.)
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு...
பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலமாக பல்கலை தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. 1997 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் வணிகவியல், புவி அமைப்பியல், கணிதம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வந்தன. தற்போது அதில் 20க்கு மேற்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்நிலையில் பல்கலைக்கழக தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்த முடிவுகள் வெளியிட காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எழுதி காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முடிவுகளை www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையத்தில் காணலாம்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு...
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்புக்கான மாணவர்சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கும் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பு கல்விஆண்டில் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதனால்,எம்.டெக். பிரிவில் உயிரி தொழில்நுட்பவியல், கணக்கீட்டு தொழில்நுட்பம் ஆகிய 2 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளித்தது.
இந்நிலையில், எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 49.5 சதவீதத்துடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் (EWS) 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உயிரி தொழில்நுட்ப வியல் பிரிவில் 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேநேரம், கணக்கீட்டு தொழில்நுட்பம் பிரிவில் தகுதியான மாணவர்கள் (EWS பிரிவு) யாரும் இல்லாததால் அதில்இடங்கள் எதுவும் ஒதுக்கப்பட வில்லை.
விதிமீறல்
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், மாநில பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துவது விதிமீறல்.
தமிழகத்தில் மிகவும் குறை வான எண்ணிக்கையில் இருக்கிற, இடஒதுக்கீட்டில் வராத பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பிற பிரிவு மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும். இதை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “மத்திய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைப்படிதான், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வருகிறது. எனவே, இதில் விதிமீறல் எதுவும் இல்லை” என்றனர்.
விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய பட்டியல் தயாரிப்பு...
சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில், விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்து, நேர்காணலுக்கு சென்ற வேளாண் துறை பெண் அலுவலர் திலகவதியை, வேளாண் துறையில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் ஊழியர்களில் யாராவது, தேர்தலில் போட்டியிட, கட்சிகளிடம் விருப்ப மனு அளித்துள்ளனரா என, விசாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர், தி.மு.க.,வில், 'சீட்' கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், தனி நபர்கள், தி.மு.க., நிர்வாகிகளின் உறவினர்கள் என, பல தரப்பட்ட ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் பெயர்; அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளின் பட்டியல், தேர்தல் செலவுக்கு தேவைப்படும் பொருளாதாரத்தின் பின்னணி குறித்து, பள்ளி கல்வித்துறை மற்றும் உளவுத்துறை தரப்பில் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த விபரங்களின் அடிப்படையில், அரசு வேலையில் இருந்து கொண்டே விதிகளை மீறி அரசியலில் ஈடுபட்டதாக, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...