தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.
அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.
அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.
இவ்வாறு சத்யபிரதா சாகு கூறினார்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...