கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பணிநியமன உத்தரவு நகல் கேட்பு:அரசு ஊழியர் சம்பளத்திற்கு சிக்கல்

பணி நியமன உத்தரவின் நகலைஅனுப்பாத துறைக்கு, இம்மாத சம்பளம் வழங்க இயலாது என, கருவூலத்துறை தெரிவித்துள்ளது.அரசு ஊழியர்களுக்கு, கருவூல அலுவலத்தில் சம்பள பட்டியல் சரிபார்க்கப்பட்டு பாங்க்கில் பணம் பட்டுவாடா செய்ய அனுமதி அளிக்கப்படும். இம்மாதம் சம்பள பட்டியலுடன், பணி நியமன உத்தரவின் நகல் இணைத்திருந்தால் மட்டுமே, பணம் பட்டுவாடா செய்ய அனுமதி அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில துறைகள் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். கண்டு கொள்ளாத பிற துறை ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மருத்துவம், நீதித்துறையை சார்ந்த ஊழியர்கள், அரசு உத்தரவு நகலை பெற, சென்னை ஆவண காப்பகத்திற்கு தங்கள் அலுவலர்களை அனுப்பியுள்ளனர். இங்கிருந்து உத்தரவு நகல்பெற்றால் மட்டுமே, இம்மாத சம்பளம் கிடைக்கும். எனவே, இவர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
திண்டுக்கல் மாவட்ட கருவூல அதிகாரி பாலசுப்பிரமணியம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் சிலரது, தற்போதைய நிலை குறித்து, அவ்வலுவலகத்தில் முழுமையான தகவல்கள் இல்லை. இதை பயன்படுத்தி, சில மாவட்டங்களில் சம்பந்தம் இல்லாதவர்களின் பெயரை சம்பள பட்டியலில் சேர்த்து முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது. எனவே தான் பணி நியமன உத்தரவு நகலை தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை தராதவர்கள் இந்நகலை, இம்மாத சம்பள பில்லுடன் தர கேட்டுள்ளோம். இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்.

>>>தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படி ஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்

அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்,''என்றார்."

>>>ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்கள் நியமனம்

ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும். வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன்,வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.

>>>சிறப்பு அந்தஸ்தை இழக்கும் சென்னை பல்கலை உயிர் இயற்பியல் துறை

உலகளவில் புகழ் பெற்ற, சென்னை பல்கலை படிகவியல் மற்றும் உயிர் இயற்பியல் துறைக்கு, போதிய பேராசிரியர்கள் இல்லாததால், விரைவில் சிறப்பு அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு அந்த துறை தள்ளப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில், 1952ம் ஆண்டு படிகவியல் மற்றும் உயிர் இயற்பியல் துறையை, நோபல் பரிசு பெற்ற சர்.சிவி.ராமனின் ஆராய்ச்சி மாணவரான பேராசிரியர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இத்துறையின் முதல் ஆராய்ச்சியையும், அவர் துவங்கினார். மிருகங்களில் காணப்படும் புரத தொகுப்பு (கொலாஜன்), ராமச்சந்திரன் வரைபடம் உள்ளிட்ட இவரின் கண்டுபிடிப்புகளுக்கு, உலகளவில் வரவேற்பு கிடைத்தது. ஆராய்ச்சியாளர்களின் பாராட்டால், இவர் துவக்கிய துறைக்கு, சிறப்பு அங்கீகாரம் கிடைத்தது. நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இவரது கண்டுபிடிப்புகள், பல விருதுகளையும் பெற்றன.இத்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால், பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.,) 1963ம் ஆண்டு, "உயர் ஆராய்ச்சி மையம்" என்ற சிறப்பு அந்தஸ்தையும் கொடுத்தது. இதன் மூலம், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் இத்துறை வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, ஆராய்ச்சி மாணவர்கள் 20 பேருக்கு, சிறப்பு ஊக்க தொகையாக, மாதம் 14,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.இந்நிலையில், 1971ம் ஆண்டு, பல்வேறு சூழ்நிலைகளால், பேராசிரியர் ராமச்சந்திரன், சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து விலகி, பெங்களூர் இந்திய ஆராய்ச்சி கழகத்தில், மூலக்கூறு மற்றும் உயிர் இயற்பியல் துறையை துவக்கினார். இவரது விலகலை அடுத்து, சொல்லிக் கொள்ளும்படியான ஆராய்ச்சிகள் இத்துறையில் மேற்கொள்ளப்படாததாலும், பேராசிரியர்கள் பற்றாக்குறையாலும் யு.ஜி.சி., வழங்கிய, "உயர் ஆராய்ச்சி மையம்" என்ற சிறப்பு அந்தஸ்தை இத்துறை இழந்தது. இதை தொடர்ந்து, மற்ற துறைகள் போல, 2007ம் ஆண்டு வரை சாதாரண துறையாகவே செயல்பட்டது. ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆராய்ச்சி உண்மை பயன்கள், கண்டுபிடிப்பு விளைவுகள் உள்ளிட்ட காரணங்களால், 2007ல் மீண்டும் இத்துறை சிறப்பு அந்தஸ்தை பெற்றது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அந்தஸ்தை பெற, குறைந்தபட்சம் ஆறு பேராசிரியர்கள் துறையில் இருக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற்ற போது, எட்டு பேராசிரியர்கள் இருந்தனர். நான்கு பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, மீதமுள்ள நான்கு பேராசிரியர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். பேராசிரியர்கள் பற்றாக்குறையால், நடப்பாண்டில், இத்துறை சிறப்பு அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.விளம்பரம்சென்னை பல்கலைக் கழகத்தில், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ளபேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, விளம்பரம் கொடுக்கப்பட்டது. இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை என பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால், இத்துறையிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து, துறை தலைவர் வேல்முருகன் கூறியதாவது: உலகளவில், சென்னை பல்கலைக் கழகத்தில் மட்டுமே, படிவியல் மற்றும் உயிர் இயற்பியல் துறை உள்ளது. மூலக்கூறுகளின் செயல்திறன் அறிதல், கட்டுப்படுத்துதல், மூலக்கூறு வடிவமைத்தல், முப்பரிமாண வடிவமைப்பு, புதிய மருந்துகள் வடிவமைப்பு செய்தல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் இத்துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. நோபல் பரிசு பெற்ற, 30 ஆராய்ச்சியாளர்கள் இத்துறையை பார்வையிட்டு உள்ளனர். சென்னை பல்கலைக் கழகத்தில், தாவரவியல், கணிதம், படிகவியல் மற்றும் உயிர் இயற்பியல் உட்பட மூன்று துறைக்கு மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்து உள்ளது.இத்துறைக்கு, 18 ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தற்போது, நான்கு பேர் மட்டுமே உள்ளனர். எனவே, சிறப்பு அந்தஸ்தின் முக்கியத்துவம் கருதி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி, உயர் கல்வி துறை அமைச்சர் பழனிப்பன், உயர்கல்வி துறை செயலர் ஸ்ரீதர், பல்கலை துணைவேந்தர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இதில் எடுக்கப்படவில்லை.தற்போது உள்ள நான்கு பேராசிரியர்களில், விரைவில் இருவர் ஓய்வு பெற உள்ளனர். இதனால், இத்துறை விரைவில் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும். உலகளவில் முக்கியம் பெற்ற இத்துறையை அழிவிலிருந்து மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

>>>இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், 9,10ம் வகுப்புகளும் சேர்ப்பா?

இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தில், ஒன்பது, 10ம் வகுப்புகளையும் சேர்ப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த வரைவு அறிக்கையை தயாரிக்க, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2009ல், இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், நாடு முழுவதும், 2010ல், அமலுக்கு வந்தது. இதன்படி, 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.மேலும், எட்டாம் வகுப்பு வரை, மாணவ, மாணவியரை தோல்வி அடைய செய்யக் கூடாது; அனைவரையும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள், அச்சட்டத்தில் உள்ளன. தமிழகத்திலும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலில் இருக்கிறது.இந்நிலையில், ஒன்பது, 10ம் வகுப்பையும், இந்த சட்டத்தில் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து விரிவாக ஆலோசித்து, வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக, அரியானா மாநில கல்வி அமைச்சர், கீதா புக்கல் தலைமையில், தனி குழுவையும் அமைத்துள்ளது. இக்குழு, வரைவு அறிக்கை தயாரிக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளது.மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின், 60வது கூட்டம், நவ., 1ம் தேதி, டில்லியில் நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சர் பல்லம் ராஜு தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் கீதா புக்கல் தலைமையிலான குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த சட்டத்தை, ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தும் திட்டமும், நிகழ்ச்சி குறிப்பில் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு முறை உள்ளது. இதனால், 10ம் வகுப்பிற்கு, இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகின்றனர் என, தெரியவில்லை. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டத்தை, அப்படியே, தமிழக அரசு ஏற்குமா எனவும் தெரியவில்லை.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் அறிவிப்பு, உடனடியாக அமலுக்கு வராது. வரைவு அறிக்கை மீது, பல கட்டங்களில் விவாதம், ஆய்வு நடக்கும். அதன்பின், இறுதி அறிக்கையை தயாரித்து, மாநில அரசுகளுக்கு வழங்கும். அதன்மீது, முதல்வர் ஆய்வு நடத்தி, இறுதி முடிவை எடுப்பார். அடுத்த கல்வியாண்டில் வருவதற்கு வாய்ப்பு இல்லை.நமது மாநிலத்தில், 10ம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு திட்டம் இருப்பதால், பொறுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
என்னென்ன கிடைக்கும்?இந்த சட்டம், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கும் வரும் போது, கல்விக் கட்டணம் ரத்து, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டுகள், மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை, இலவச மதிய உணவு, இலவச சைக்கிள் என, பல்வேறு திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு கிடைக்கும்.

>>>வங்கிப் பணிகளை பலர் விரும்புவது எதனால்?

கடந்த சில ஆண்டுகளாகவே நமது பொதுத்துறை வங்கிகளின் கிளார்க் மற்றும் அதிகாரி நிலைப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு நமது இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிக அளவில் போட்டியிடுவதைப் பார்க்க முடிகிறது. எதனால் வங்கிப் பணிகளை நோக்கி நமது இளைஞர்கள் பயணிக்கின்றனர் வேகமாக வளரும் துறை பாங்கிங்தான். சுதந்திரத்திற்குப் பிறகும், குறிப்பாக தேசிய மயமாக்கப்படலுக்குப் பின்பும் இந்தியாவில் வங்கித் துறை படு வேகமாக வளர்ந்து வருகிறது. Class Banking to Mass Banking என்னும் அடிப்படையில் குறிப்பிட்ட சிலருக்காக இயங்கி வந்த பொதுத் துறை வங்கிகள் தேசிய மயமாக்கலின் பின் பொது மக்களுக்கான வங்கிச் சேவையைத் தருவதில் கவனம் செலுத்தின. இதனால் வங்கிக் கிளைகள் ஒருபுறமும் டெபாசிட் அக்கவுண்டுகள் மறுபுறமும் அதிகரித்துக் கொண்டே சென்றன. வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் பாங்கிங் துறையை அனைவரும் நாடுகின்றனர். வரக்கூடிய கால கட்டத்திலும் வங்கித் துறையானது மேலும் வளரும் என்பதே பொருளாதார எதிர்பார்ப்பு என்பதால் இதில் வேலை வாய்ப்புகளை பலரும் நாடுகின்றனர்.
அருமையான சம்பளம்
வங்கித் துறையில் ஊழியர்களுக்குத் தரப்படும் சம்பளமானது தனியார் துறை வங்கியல்லாத நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் இல்லை தான் என்றாலும் இந்தப் பணிகளுக்குத் தரப்படும் சம்பளமானது மோசமானதும் அல்ல என்பதே உண்மை. கிளார்க் பணிகளுக்கு இந்த சம்பளம் என்றால், வங்கியில் கவர்ச்சிகரமான பணி என்பதே அதிகாரி நிலையில் தரப்படும் சம்பளம் தான். சம்பளம் தவிர பிற படிகளும் இளைஞர்களைக் கவருகின்றன. வீட்டுக் கடன் வசதி, பண்டிகைக்கான கடன், வாகனக் கடன், கம்ப்யூட்டர் கடன் என கடன் வசதிகள் குறைந்த வட்டியில் வங்கிப் பணிகளில் கிடைக்கின்றன. இதுவும் நமது இளைஞர்கள் வங்கிப் பணிகளை நாடுவதற்கான மற்றொரு முக்கியக் காரணம் எனலாம். வங்கித் துறை இவ்வளவு வேகமாக வளருவதாலேயே அதன் ஊழியர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. திறன் வாய்ந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் வங்கிகள் முனைப்பு காட்டுகின்றன. பல திறன்களுக்கும் வாய்ப்புகள் உள்ள துறை கிளார்க் மற்றும் பி.ஓ., என்று மட்டுமல்ல, ஐ.டி., ஆபிசர், சி.ஏ., கம்ப்யூட்டர் திறனாளர், சிவில் இன்ஜினியர் என பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. விற்பனைப் பிரிவில் எண்ணற்ற காலியிடங்கள் எப்போதும் இருப்பதால் இளைஞர்கள் வங்கிகளை நாடுவதில் ஆச்சரியமில்லை. விரும்பக் கூடிய பணிச் சூழல் லேட் ஹவர் ஒர்க் எனப்படும் கால வரம்முறையற்ற பணித்தேவை இங்கில்லை என்றே கூறலாம். கார்ப்பரேட் சூழலில் வங்கிகள் இயங்குவதால் இங்கு பணி புரிவது என்பது மிக விரும்பத் தக்க ஆசை என்றே கூறலாம். ஒயிட் காலர் பணி என்றால் இது தான் ஒயிட் காலர் பணி.  எனவே இளைஞர்களே! வங்கிகள் காத்திருக்கின்றன தங்களுக்கான நபர்களைத் தேர்வு செய்ய....உங்களை,உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு வங்கிகளோடு இணையுங்கள் அவற்றின் முன்னேற்ற ஓட்டத்தில்....

>>>இன்று உலக சிக்கன நாள்

"வரவு எட்டணா... செலவு பத்தணா' வாக இருந்தால், வாழ்க்கையில் சந்தோஷம் வராமல் போகும். ஆயிரங்களிலும், லட்சங்களிலும் சம்பளம் வாங்குவோர் மட்டுமல்ல... அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும், சேமிப்பு அவசியம். வரவு அறிந்து செலவு உணர்ந்து செயல்பட்டால், சந்தோஷம் நம் வசமாகும். அடுத்து வரும் காலங்களில் குடிநீருக்காக பெரும் போராட்டம் நடக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு, நமக்கு ஒரு எச்சரிக்கை. புழக்கத்திற்குத் தேவையான தண்ணீரில், 75 சதவீதம் நிலத்தடி நீரை நம்பியுள்ளோம். பெரு நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகள், மற்றும் மூடப்பட்ட கிணறுகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.  தமிழ்நாட்டை தற்போது அச்சுறுத்தும் ஒரே விஷயம், மின்வெட்டு தான். இனி வரும் காலங்களில், ஒவ்வொருவரின் மின் தேவையும் அதிகரிக்கும் போது, இப்பிரச்னை இன்னும் பூதாகரமாக எழும். இன்று உலக சிக்கன நாள்... ஒவ்வொரு வீட்டிலும், பொருளாதாரம், மின்சாரம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் தான், அடுத்த தலைமுறை தப்பிக்கும். ரேஷனில் ஒவ்வொரு மாதமும் அரிசியை வாங்கி, வீணாக்குகிறோம். இட்லிக்கு இதையும் சேர்த்து அரைக்கலாம். இடியாப்பத்திற்கு ருசியாக இருக்கும். அரைத்து வேக வைத்து கூழாக்கி, வடகம் செய்யலாம். இதன்மூலம், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஏழு கிலோ அரிசிக்குரிய காசை மிச்சப்படுத்தலாம். ஆடம்பரத்திற்கு ஆடைகள் வாங்காமல், அத்தியாவசியத்திற்கு வாங்கலாம். குழந்தைகளின் நாளைய கல்விக்கு, சிறுமுதலீடாக இன்சூரன்ஸ் செய்யலாம். மளிகைப் பொருட்களை தினமும் வாங்குவதை விட, மொத்தமாக வாங்கலாம். சிலர் சமைக்கும் போது அளவு தெரியாமல், கூடுதலாக செய்வர். தேவைக்கேற்ப சமைத்தால், எதுவும் வீணாகாது. ஒரு பொருளை வாங்கும் போது, இருமுறை யோசித்து வாங்க வேண்டும். வருமானம் முழுவதையும் செலவு செய்யாமல், சம்பளத்தில் 10 சதவீதத்தை, தனி சேமிப்பாக வைக்க வேண்டும். மிக அவசரம் என்றால் ஒழிய, அப்பணத்தை தொடக்கூடாது. குடும்பத்தில் கணவன், மனைவியும் தங்கள் சம்பளத்தை வைத்து முதலில் திட்டமிட்டு, ஒரு "பட்ஜெட்' போட வேண்டும். வருமானத்திற்குள் செலவு அடங்க வேண்டும். அடிக்கடி ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். "பாக்கெட்' பொருட்களை தவிர்த்து, குழந்தைகளுக்கு விருப்பமானவற்றை, வீட்டில் செய்து கொடுப்பது, வீண் செலவை தவிர்க்கும். நடந்து செல்லும் தூரத்திற்கு வாகனம் வேண்டாம். சிக்கனமாக இருந்தால், வீட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, தீபாவளி உட்பட முக்கிய விழாக்களுக்கு ஆடைகள் வாங்கலாம். வீட்டு சூழ்நிலையை பொருத்து திட்டமிட வேண்டும். அடுத்த வீட்டில் வாங்கும் பொருட்களை கணக்கில் எடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் சேமிப்பை கற்றுக் கொடுக்க வேண்டும்.  குடிநீர் சிக்கனம் குறித்து பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். "பிரிட்ஜில்', காய்கறிகளை சேர்த்து வைக்காமல், தினமும் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கலாம். வாய்ப்பிருந்தால் ஒரே அறையில் அனைவரும் தூங்கலாம். அவசியத்திற்கு "மிக்ஸி'யும், மற்றவைகளுக்கு அம்மியிலும் அரைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் போது அம்மி அரைத்தால், ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டினால், உடல்நலம் மேம்படும். பொருளாதார ரீதியாகவும் நமக்கு பணம் மிச்சமாகும். "வாஷிங் மிஷின்', வாட்டர் ஹீட்டர் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடைந்த "ஸ்விட்ச்',"பிளக்', பழுதுபட்ட "வயர்'களை மாற்றி, மின்கசிவை தடுக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். தினந்தோறும் துணிகளை "அயர்ன்' பண்ணுவதை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள் செய்யலாம். "டியூப் லைட்'களில், "எலக்ட்ரானிக் சோக்' பொருத்தலாம். மின்சாரம் இருந்தால் தான் சேமிக்க முடியும். மின்சாரம் இருக்கும் நேரத்தில்தான், அனைத்து பணிகளையும் செய்யும், கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

>>>அக்டோபர் 30 [October 30]....

  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ‌ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
  • ஜான்லோகி பயர்ட், பிரிட்டனின் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்(1925)

>>>Function Keys - பயன்பாடுகள்...

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்

F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

>>>மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை - புதிய சட்டம்

பள்ளிகளில் மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.பள்ளிகளில் மாணவர்களை சிறிய தவறுக்காக கூட ஆசிரியர்கள் கடுமையாக அடிப்பதாவும் மாணவர்கள் குறிப்பிட்ட கடையில்தான் பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும் புகார்கள் வந்தன. இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் ‘பள்ளிகளில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்பு மசோதா 2012 என்ற பெயரில் புதிய வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்த மசோதா ஆய்வுக்காக தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவில் மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், அபராத தொகை எவ்வளவு என்பது கூறப்படவில்லை. மேலும், சீருடைகள், புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை குறிப்பிட்ட கடையில் வாங்க சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தினாலும் சிறை தண்டனை விதிக்கப்படும். மாணவர்களிடம் இருந்து சேர்க்கைக்காக எந்தவிதமான நிதியோ அல்லது நன்கொடையோ பெறக்கூடாது. மீறி பெறப்பட்டால் கல்வி தீர்ப்பாயம் மூலம் அந்த தொகை பறிமுதல் செய்யப்படும். படிப்பில் சுமாராக இருந்தால் மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவதோ அல்லது பெயில் ஆக்குவதற்கோ மசோதா தடை விதிக்கிறது. மேலும், தகுதி உள்ள மாணவர்களை பரிட்சைக்கு செல்ல விடாமல் தடுப்பதும் கூடாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான கையேடு, விண்ணப்ப படிவங்கள் போன்றவற்றுக்கும் கட்டணம் வசூலிப்பதை மசோதா தடை செய்கிறது. பள்ளி நேரம் முடிந்தபின் பள்ளியிலோ அல்லது வெளியிலோ டியூஷன் சேரச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
யாரும் பதட்டமடையாதீங்க....    உத்தரவுகள் அரசுப்பள்ளிகளுக்கு மட்டும்தானாம்....

>>>ரூ.6 கோடியில் பள்ளி கட்டிடம் விழாவில் கலெக்டர் பெருமிதம்

மாவட்ட அளவில், 5.70 கோடி ரூபாய் மதிப்பில், 114 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுவதாக கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் தோகமலை யூனியன் ஆர்ச்சம்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா மற்றும் வடசேரி பஞ்சாயத்தில் குளித்தலை எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, 5.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடந்தது.புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது: தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதுக்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில், 2011-12ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில், 5.70 கோடி ரூபாய் மதிப்பில், 114 கூடுதல் வகுப்பறைகள், 1.14 கோடி ரூபாய் மதிப்பில், 127 பொது கழிப்பறைகள், 21.60 லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்கள் கழிப்பறைகள், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுசுவர் கட்டும் பணிகள் நடக்கிறது.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

>>>கனமழை:பள்ளிகளுக்கு விடுமுறை

நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கலெக்டர் முனுசாமி அவர்களின்  அறிவிப்பையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. திருவாரூர், கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததாலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

>>>அக்டோபர் 29 [October 29]....

  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆர்மபித்தது(1950)
  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)

>>>காரல் மார்க்ஸ்


                                              காரல் மார்க்ஸ் - சிந்தனைத்துளி !!!

  • உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்பளிக்கும் மூலம்.மக்கள் இன்பமான வாழ்க்கை வாழவேண்டுமா? முதலில் மதங்களை ஒழித்துக் கட்டுங்கள்.
  •  மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை. நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாகிறது.
  • உன்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்புகிறாயோ அதைத் தீவிரமாகச் செய்து முடிக்க முயற்சி செய். அதுவே வெற்றி பெற உற்ற வழி.
  • பிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது. அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும்.
  • தலைவணங்குவதையும் கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன். 
  • மிகப்பெரிய தோல்வியை விடவும் மிகப்பெரும் வெற்றிக்கே நாம் மிகவும் அஞ்ச வேண்டும்.
  • மதம் மக்களுக்கு அபின்.
  • விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.
  • உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.
  • ஒருவன் தனக்காக தன்னுடைய வாழ்க்கைக்காக உழைக்கும்போது தான் அசலான மனிதனாகிறான்.
  • நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
  • மக்களே கலை, இலக்கியம், மொழி ஆகிய அனைத்துக்கும் வித்தும் வீரியமும் சத்தும் சாரமுமாய் இருக்கிறார்கள். அவர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்.
  • நமக்கு முந்தைய தலைமுறை தத்துவ தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால் தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவதுதான். 
  • உள்நாட்டில் பல வகுப்பினரிடையே உள்ள வர்க்கப் பகைமை மறைகிற அளவை பொறுத்து. நாடுகளுக்கிடையே உள்ள பகைமையும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
  • மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.
காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு

தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.

தாய்: ஹென்ரிட்டா.

பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.

மதம்: யூத மதம்.

சொந்த நாடு: பிரெஞ்சு.

பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.

உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.

பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கீல் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை: ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.

தொழில்:  பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

1.உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யூனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!

எல்லா மக்களும் என் மக்கள்!!

நானோர் உலக மகன்!!!”

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை வறுமை கொலைவெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் “உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

“யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்

>>>ஆப்ரஹாம் லிங்கன்....

 
ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார். "மிஸ்டர் லிங்கன், உங்களை இங்கு பலர் பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்.” என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார் ஒருவர்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் "நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல, இப்போது உம் செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன். எனக்கு செருப்புத் தைக்கவும் தெரியும்,நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விஷயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்" என்று ஒரு போடு போட்டார்.

இயலாமையோ, வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல. தாழ்வு மனப்பான்மை தவறானது. தாழ்வு மனப்பான்மையைத் தூரம் தள்ளினால் வெற்றி நிச்சயம்.

>>>"நாக்' அங்கீகாரம் பெறாவிட்டால் நிதி உதவி கிடையாது:கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

"தேசிய தர ஆய்வு மற்றும் அங்கீகார குழுவின் (நாக்), அங்கீகாரம் பெறாத பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு, மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், "நாக்' அங்கீகாரம் பெற்ற, 12 பல்கலைகள், 161 கல்லூரிகளுக்கான அங்கீகார காலம் முடிவடைந்தும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதாக, "நாக்' தெரிவித்துள்ளது. பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,)வின் கீழ், தேசிய தர ஆய்வு மற்றும் அங்கீகார குழு இயங்கி வருகிறது. பல்கலை மற்றும் கல்லூரிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தரம், ஆராய்ச்சி திட்டங்களில், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செயல்பாடுகளில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவியரின் பங்கு என்பது உட்பட, பல்வேறு அம்சங்களை, "நாக்' குழு ஆய்வு செய்து முடிவெடுக்கும். ஒரு முறை பெறப்படும் அங்கீகாரம், ஐந்து ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பின், மீண்டும் தேசிய குழுவிற்கு விண்ணப்பித்தால், குழு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, தகுதி இருந்தால், மீண்டும் அங்கீகாரம் வழங்க சிபாரிசு செய்வர் .உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, "நாக்' அங்கீகாரம் பெற்றிருந்தால், சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. மேலும், "நாக்' அங்கீகாரம் இருந்தால், மத்திய அரசின் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நிதி உதவியைப் பெற, "நாக்' அமைப்பின், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.எனினும், நாடு முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகள், "நாக்' அங்கீகாரம் பெற ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, காமராஜர் பல்கலை, பெரியார் பல்கலை, பாரத் பல்கலை உள்ளிட்ட, 12 பல்கலைகள், 161 கல்லூரிகள் மட்டும், "நாக்' அங்கீகாரம் பெற்றிருந்தன.ஆனால், இந்த பல்கலைகள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகார காலமும், காலாவதியாகி விட்டது என்றும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை என்றும், "நாக்' தெரிவித்துள்ளது. 
இந்த விவகாரம் குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) கூறுகையில், ""உயர்கல்வி நிறுவனங்கள், "நாக்' அங்கீகார தகுதி பெறுவது அவசியம். நாங்கள், "நாக்' அங்கீகாரம் பெற விண்ணப்பித்து உள்ளோம். விரைவில், "நாக்' குழு, பல்கலைக்கு வரும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்

>>>வருவாய் திறன் உதவித்தொகை தேர்வு:விண்ணப்பங்கள் வரவேற்பு

:தமிழகத்தில் டிச.,30 ல் நடக்க இருக்கும் தேசிய வருவாய் திறன் உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பதவியிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவ.,9 க்குள், தலைமை ஆசிரியர்களிடம் தேர்வு கட்டணம் ரூ.50 செலுத்தி, பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2011-12 கல்வியாண்டில், 7 ம் வகுப்பு தேர்வில், எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீதம், பிற மாணவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் உதவித்தொகை மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தற்போது, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். பூர்த்தி செய்து வாங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நவ.,12 க்குள், முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

>>>அண்ணா பல்கலையில் ஒருங்கிணைந்த பொறியயில் - மேலாண்மை படிப்பு

உலகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களின் வழியைப் பின்பற்றி, ஒருங்கிணைந்த பொறியியல்-மேலாண்மைப் படிப்பை, அண்ணா பல்கலையில் வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பொறியியல் படிப்பை முடித்தப்பிறகு, மேலாண்மை படிக்கவிரும்பும் மாணவர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இப்படிப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கும், மேலாண்மைத் திறன்களை வழங்குவதை இப்படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு பொறியியல் பட்டதாரி, தொழில்துறையின் தேவைக்கேற்ப தயாராகி இருக்க வேண்டும் மற்றும் ஒரு தொழில்முனைபவராக உருவாகும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள்(அகடமிக்) உண்டு. இதையடுத்து, பொறியியல் மாணவர்களுக்கான, தொழில்துறை இன்டர்ன்ஷிப் செமஸ்டரும்(6 மாதங்கள்) உண்டு. இப்படிப்பில் 3 ஆண்டுகள் நிறைவுசெய்த ஒருவர், பொறியியல் படிப்பில் இளநிலைப் பட்டத்தைப் பெறுகிறார். அதை முடித்ததும், அவர் வெளியேறிச் சென்று எங்கேனும் சிறிதுகாலம் பணிபுரிந்து அனுபவம் பெற்று, பின்னர் மீண்டும் வந்து 4ம் வருட படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதுதொடர்பாக, அண்ணாப் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது: இந்த புதிய படிப்பு தொடர்பான செயல்திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து கொண்டுள்ளோம். இந்தப் படிப்பிலுள்ள, "வெளியே சென்று அனுபவம் பெற்று பின்னர் திரும்பி வந்து படித்தல்" என்ற சலுகையால், படிப்பை பாதியிலேயே கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஏனெனில், பல மாணவர்கள் பொறியியல் பட்டம் பெற்றால் போதுமென நினைத்து திரும்ப வரமாட்டார்கள் என்றார். தற்போதைய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில், M.Sc., Computer science பிரிவில் மட்டுமே ஒருங்கிணைந்த(Integrated) படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய படிப்பிற்கு தனி நுழைவுத் தேர்வு தேவை என்று சில கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் கட்-ஆப் குறைவாக இருந்தால், மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு கிடைக்காத ஒரு மாணவர், இப்படிப்பை நாடி வருவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் 5.5 வருடங்களைக் கொண்ட, இந்த இணைப்புப் படிப்பை, அடுத்த 2013 முதல் வழங்க விரும்பும் Affiliated கல்வி நிறுவனங்கள், தன்னிடம் விண்ணப்பிக்கலாம் என, சமீபத்தில், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(AICTE) அறிவித்தது. அதன்படி, 500 கல்வி நிறுவனங்கள் வரை விண்ணப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

>>>கர்நாடகாவுக்கு “தாரைவார்க்க” இருந்த எஸ்.எஸ்.ஏ. திட்ட பள்ளிமானியம் தப்பியது...!?

கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதில், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த மாதத்தில், மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலகத்தில் இருந்து, எந்த காரணமும் தெரிவிக்காமல், அனைத்து பள்ளிகளும் வளர்ச்சி நிதியில் இருந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் மெட்டீரியல்ஸ் பேங்க்' என்ற பெயருக்கு, தலா, 2,000 ரூபாய், "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும்' என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு:
இதனால், 35 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், "டிடி' எடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், மாநில திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். எந்த தகவலும் கூறாமல், "டிடி' அனுப்ப சொன்னதால், தலைமை ஆசிரியர்கள், கிராம கல்வி குழுவினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.  மேலும், "கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தமிழகத்திலேயே கிடைக்கும்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள நிறுவனத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?' என்றும், எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து  செய்தி வெளியானது. இந்நிலையில், மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும், "மைசூரு நிறுவனத்துக்கு வழங்க எடுத்த, "டிடி'யை அனுப்ப வேண்டாம்; நிறுத்தி வையுங்கள்' என, தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "பணம் அனுப்பியிருந்தால், அது திரும்ப உங்களுக்கே அனுப்பி வைக்கப்படும் என, மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து, தகவல் தெரிவிக்கப்பட்டது' என்றார்.

>>>மருத்துவ மாணவர் தேர்ச்சி விகிதம் சரிவு!

கடந்த 2011ம் ஆண்டு, தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில், 33% பேர், முதலாமாண்டு தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும், மொத்தம் 29 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,462 மாணவர்கள் முதலாண்டுத் தேர்வினை எழுதினர். ஆனால், அவர்களில் 2,341 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மருத்துவத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற, ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற வேண்டுமென்ற புதிய விதியை மருத்துவப் பல்கலை அறிமுகப்படுத்தி, அதனடிப்படையில் வெளியான தேர்வு முடிவுகளில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர்(இம்மாதம்) 8ம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இத்தேர்வு முடிவுகளை, பல்கலை நிறுத்தி வைத்திருந்தது. ஏனெனில், புதிய மதிப்பெண் விதிமுறைகளுக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலின்(MCI) அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. அனுமதி கிடைத்ததும், முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, ஒரு மருத்துவ மாணவர் தேர்ச்சிப் பெறுவதற்கு, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம் 50% aggregate மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற விதி இருந்தது.
தேர்ச்சி விகிதத்தில் முன்னணி பெற்ற கல்லூரிகள்
ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி - 86.67% தேர்ச்சி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 85.33% தேர்ச்சி
கோவை மருத்துவக் கல்லூரி - 85.03% தேர்ச்சி
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 85%

மிகக் குறைவான தேர்ச்சி சதவீகிதம் பெற்ற கல்லூரி
அன்னபூர்னா மருத்துவக் கல்லூரி - 45.94%.

>>>அக்டோபர் 28 [October 28]....

  • செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
  • முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
  • கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்க‌ா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
  • ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)

>>>பெற்றோர்களுக்கு...

 
* பிள்ளைகளை முடிந்தவரை அருகில் உள்ள பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் நான்கு கி.மீ. சுற்றளவுக்குள் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இருக்கவும் செய்கிறது. அந்தப் பள்ளியின் தரம் சரியில்லை எனில், அதற்காக நாம் போராட வேண்டுமே ஒழிய, அரசுப் பள்ளிகளைப் புறக்கணிப்பது தீர்வாகாது. ஏனெனில், அரசுப் பள்ளிகள் நம் வரிப் பணத்தில் இயங்குகின்றன. அருகில் உள்ள பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது இந்த விபத்து, ஆபத்துகளை எளிதாகத் தவிர்க்க முடியும். அத்துடன், உடல் சோர்வு, நச்சுக் காற்று மூலம் ஏற்படும் நோய்கள் போன்றவற்றில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

* தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் மட்டும் அல்லாது எந்த ஒரு பள்ளி வாகனமும் அதிவேகத்தோடு சென்றால், அந்த வாகனத்தின் பின்புறம் 'புகார் தெரிவிக்க’ என்று எழுதப்பட்டிருக்கும் எண்ணுக்குப் புகார் அளிக்கலாம்.

* ஒவ்வொரு பேருந்திலும் பின்புறம் பயணிகள் ஏறும் இடத்துக்கு அருகில் கடைசியாக எப்போது ஆய்வுக்குச் சென்றது என்ற விவரங்கள் எழுதப்பட்டு இருக்கும். அந்தத் தகவல்கள் மூலமும் அந்த வாகனத்தின் பராமரிப்பைப் பெற்றோரே உறுதி செய்துகொள்ளலாம்.

>>>டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. டி.இ.டி., முதல்தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்" நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண்கள், "வெயிட்டேஜ்" அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40 மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். அதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100 மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ் நகல்களை பெறவும், இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என தெரிகிறது.

>>>டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

>>>ஆசிரியர் ஓய்வு வயது அதிகரிப்பு

ஜார்கண்ட் மாநில பல்கலை.,யில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் அர்ஜூன்முன்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 62 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

>>>அதிகரிக்கும் ஆசிரியைகள்...!

இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர்  ஆசிரியைகள். சில ஆண்டுகளாக ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008 2009ம் ஆண்டில் 43.46 சதவீதமாகவும், 2009 2010ம் ஆண்டில் 44.83 சதவீதமாகவும், 2010 2011ல் இந்த எண்ணிக்கை 45.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியைகளின் பணியிடங்களை அதிகரிக்கும் முயற்சி 1990களிலேயே தொடங்கப்பட்டது.

>>>2012 வேலைவாய்ப்பு பட்டியலில் இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம்

சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ளை 2012ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புப் பட்டியலில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இதே பட்டியலில் 134வது இடத்தில் இருந்த இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம், ஒரே ஆண்டில் சுமார் 100 இடங்கள் முன்னேறி 35வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளை தங்கள் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள சர்வதேச நிறுவனங்கள் போட்டா போட்டி போடுவதையே இது காட்டுவதாக இந்திய அறிவியல் ஆய்வு நிறுவன பேராசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கன்சல்டிங் நிறுவனமான எமர்ஜிங் மற்றும் ஜெர்மன் நாட்டின் ட்ரென்டன்ஸ் ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து, உலகம் முழுவதும் எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச சந்தையில் மவுசு இருக்கிறது என்ற கோணத்தில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகின்றன. 2012ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், Harvard, Yale, Cambridge, Oxford, Stanford, MIT, Columbia, Princeton, Imperial College of London, Goethe-University (Frankfurt) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

>>>அக்டோபர் 27 [October 27]....

  • அமெரிக்க கடற்படை தினம்
  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)

>>>இன்று ஒரு தகவல்....

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!
ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம். இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்
ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன. 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள். 41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள். குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை
ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும். எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம். உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:
தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்

தாய்ப்பால்
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:
தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.

தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.

கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.

குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.

பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.

அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.

குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?

குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.

நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.

சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.

சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.

ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.

குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.
சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்

பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்

பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.

>>>அரசு ஊழியருக்கு "லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுகை

பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது. இவை மூன்று மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "டிஇசட் 100' -ரூ.10,999, "டிஇசட் 200' -ரூ.6499, "டிஇசட் 300' -ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது. முதல் கட்டமாக டெராகாம் நிறுவன "டிஇசட் 200' மாடல்கள், பி.எஸ்.என்.எல்., முகவர் மூலம் விற்கப்படுகின்றன. இதனுடன், "3 ஜி டேட்டா கார்டு' -ரூ.2100, "கீ பேடு' -ரூ.800, "சிம்கார்டு' -150 என மொத்தம், ரூ.9,549 க்கு விற்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 12.5 சதவீத தள்ளுபடியிலும் இவை வழங்கப்படுகின்றன. இச்சலுகை அக்., 31 ம் தேதி வரை உள்ளது. பொதுமக்கள், தள்ளுபடி இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.

>>>827 பேருக்கு மீண்டும் கலந்தாய்வு : அண்ணா பல்கலை அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஓ.சி., பிரிவில், 827 பேருக்கு, பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுகிறது. அதன்படி, பொறியியல் சேர்க்கையில், ஓ.சி., பிரிவில், 31 சதவீதம் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால், இந்த பிரிவில், 50 சதவீதம் பின்பற்றப்பட வேண்டும் என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அதன்படி, 19 சதவீதம், ஓ.சி., பிரிவினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்த இடங்களை நிரப்ப, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஓ.சி., பிரிவில் வரும், 827 பேருக்கு, 31ம் தேதி, அண்ணா பல்கலையில், பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: ஓ.சி., பிரிவில், முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர் தான் வருவர். எனவே, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. இந்த மாணவர் அனைவரும், வேறொரு கல்லூரியில் சேர்ந்திருப்பர்; அண்ணா பல்கலையிலேயே, ஏதாவது ஒரு பிரிவில் சேர்ந்திருக்கலாம். மறு கலந்தாய்வில், கல்லூரியை மாற்றவும், விரும்பிய பாடப் பிரிவில் சேர்வதற்கும், வாய்ப்புகள் உள்ளன. ஓ.சி., பிரிவில், காலியாக உள்ள பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளின் விவரங்களை, அழைப்புக் கடிதத்துடன் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

>>>மருத்துவப் பல்கலை முடிவுகளில் தலையிட முடியாது: இந்திய மருத்துவ கவுன்சில்

ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் தனக்கான தேர்வு மற்றும் மதிப்பீட்டு விதிமுறைகளை, சுய விருப்பத்தின்படி வகுத்துக்கொள்ள முடியுமென்றும், இதில் தலையிட முடியாதென்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. இத்தகவலை, பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு, தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு ஆகிய அனைத்துவகைத் தேர்வுகளிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி என்ற புதிய விதியை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கொண்டு வந்தது. ஆனால், இப்புதிய திட்டத்திற்கு மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. பலர் தடையாணை வாங்க நீதிமன்றம் சென்றனர். இந்த எதிர்ப்புகளின் விளைவாக, தமிழக அரசு, அப்போதைய பருவ தேர்வுகளுக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து உத்தரவிட்டது. பின்னர், மீண்டும் அதே விதியை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை கொண்டு வந்தது. அதற்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. பலர் நீதிமன்ற படிக்கட்டுகள் ஏறினர். இந்நிலையில்தான், இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. பல்கலைக்கழகம் வகுக்கும் விதிமுறைகளில் தலையிட முடியாது என்றும், இதுபோன்ற முடிவுகள் பல்கலையின் சுயஉரிமை என்றும் MCI தெரிவித்துள்ளது. இதன்மூலம், எழுத்துத் தேர்வாக இருந்தாலும் சரி, செய்முறைத் தேர்வாக இருந்தாலும் சரி, அவைகளில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றால்தான் தேர்ச்சிப் பெற முடியும் என்ற புதிய விதிமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. "கடந்த 1997ம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 15 வருடங்களாக, பாடத்திட்டம் மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறைகளில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே, இந்தப் புதிய மாற்றம் காலத்தின் கட்டாயம். இதை செய்தே ஆக வேண்டும். இப்புதிய விதிமுறை மக்களின் வரவேற்பை பெற்ற ஒன்று" என்றார்.

>>>வர்த்தக காரணங்களுக்கு பள்ளி நிலம் பயன்படுத்த தடை கோரி மனு

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, வணிக நோக்கத்துக்காக மாற்றுவதற்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த, குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சாலிகிராமத்தில், பள்ளி ஒன்றை துவங்குவதற்காக, 3.59 ஏக்கர் நிலத்தை, 1953ல், அரசு ஒதுக்கியது. பள்ளி தவிர, வேறு நோக்கத்திற்காக, இந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது. அதன்படி, 1956ல், ஜெனரல் கரியப்பா பெயரில், கில்டு ஆப் சர்வீஸ், பள்ளியை துவக்கியது. பின்னர், 1968ல், 2.94 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், ஆரம்பப் பள்ளி துவங்கப்பட்டது. காலி இடத்தை, விளையாட்டு மைதானமாக, மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில், தொழிற் பயிற்சி மையம் நடத்த, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் கோரி, பள்ளி கல்வி இயக்குனரிடம், கில்டு ஆப் சர்வீஸ் தலைவர் அனுமதி கேட்டார்; அது, நிராகரிக்கப்பட்டது. காலியிடத்தை, மாணவர்களின் நலன்களுக்கு எதிராக பயன்படுத்த, முயற்சிகள் நடக்கிறது. எனவே, பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, தொழில் பயிற்சி வகுப்புகள் அல்லது வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" அரசுக்கு, "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிட்டது.

>>>மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி

தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,) பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அலுவலர்களின் பணிகள் முக்கியம். முப்பருவ கல்வி முறையில் முழுமையான தொடர் கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா பொருட்கள் வழங்குவது, பள்ளி ஆண்டாய்வு, கல்வி தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்கலுக்கான ஒப்புதல் போன்ற பணிகளில் டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் வரை மாநிலத்தில் 27 டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் 32 பேருக்கு சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டபின், தற்போது 55 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன. குறிப்பாக, தேனி (தொடக்க கல்வி), மதுரை (மெட்ரிக் ஆய்வாளர்), தேவகோட்டை போன்ற 55 இடங்களில் டி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐம்பது ஆண்டுகளாக காலியாக இருந்த உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பிய பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்புள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியாகியும், ஓய்வு பெறும் சூழ்நிலையிலும் உள்ள தலைமையாசிரியர்களுக்கு டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், "டி.இ.ஓ.,க்களுக்கான பணிமூப்பு பட்டியல் 1.1.2012ல் தயாரித்து, கல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது கிடப்பில் உள்ளது. நிர்வாக ரீதியாகவும், அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மாணவர்களை முழுமையாக சென்றடையவும், காலியான டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்றார்.

>>>அக்டோபர் 26 [October 26]....

  • ஆஸ்திரியா தேசிய தினம்(1955)
  • அமெரிக்க செனட் அவை உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்(1947)
  • அமெரிக்கா, அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

>>>அரசாணை 270, நாள்: 22-10-2012, பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியரின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் [School Education G.O.270, Dated:22-10-2012]

>>>இன்று பாப்லோ பிக்கோஸாவின் பிறந்தநாள்.

 Photo: உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாஸோ, ஒருநாள் மர பீரோ ஒன்றை வாங்க கடைக்குச் சென்றார். கடைக்காரருக்கு அவரை அடையாளம் தெரிந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அங்கு இருந்த மர பீரோக்களைப் பார்த்தார். எதுவும் திருப்தி இல்லை. பிகாஸோ, தான் மனதில் நினைக்கும் பீரோவின் அமைப்பைப் பற்றி கடை முதலாளியிடம் கூறினார். அவருக்கு சரியாகப் புரியாததால் ஒரு காகிதத்தை எடுத்து அதில் பீரோவின் படத்தை வரைந்தார். ''இந்த மாதிரி பீரோவைச் செய்ய எவ்வளவு செலவாகும்?'' என்று கேட்டார்.

கடைக்காரர் அந்தப் படத்தைக் காட்டி, ''நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். இந்த பீரோவுக்கு ஈடாக நீங்கள் வரைந்திருக்கும் இந்தப் படத்தின் கீழே உங்கள் கையெழுத்தை மட்டும் போட்டு எனக்குக் கொடுத்து விடுங்கள் அது போதும் எனக்கு'' என்றார்.

-ர.சு. ப்ரணவ் தீபக்,
மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, சென்னை
இன்று - அக்.25: இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஓவியக் கலைஞனாகத் திகழ்ந்த பாப்லோ பிக்கோஸாவின் பிறந்தநாள்.

Photo: இன்று - அக்.25: இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஓவியக் கலைஞனாகத் திகழ்ந்த பாப்லோ பிக்கோஸாவின் பிறந்தநாள். 
உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாஸோ, ஒருநாள் மர பீரோ ஒன்றை வாங்க கடைக்குச் சென்றார். கடைக்காரருக்கு அவரை அடையாளம் தெரிந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அங்கு இருந்த மர பீரோக்களைப் பார்த்தார். எதுவும் திருப்தி இல்லை. பிகாஸோ, தான் மனதில் நினைக்கும்
பீரோவின் அமைப்பைப் பற்றி கடை முதலாளியிடம் கூறினார். அவருக்கு சரியாகப் புரியாததால் ஒரு காகிதத்தை எடுத்து அதில் பீரோவின் படத்தை வரைந்தார். ''இந்த மாதிரி பீரோவைச் செய்ய எவ்வளவு செலவாகும்?'' என்று கேட்டார்.
கடைக்காரர் அந்தப் படத்தைக் காட்டி, ''நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். இந்த பீரோவுக்கு ஈடாக நீங்கள் வரைந்திருக்கும் இந்தப் படத்தின் கீழே உங்கள் கையெழுத்தை மட்டும் போட்டு எனக்குக் கொடுத்து விடுங்கள் அது போதும் எனக்கு'' என்றார்.

>>>நிதியுதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க இடப்பரப்பளவு நிர்ணயம்

நிதியுதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க கீழக்காணும் இடப்பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மாநகராட்சி                                        - 6 கிரவுண்டு
  • மாவட்டத் தலைமை இடங்கள் - 8 கிரவுண்டு
  • நகராட்சி                                               - 10 கிரவுண்டு
  • பேரூராட்சி                                          - 1 ஏக்கர்
  • ஊரகப்பகுதி                                        - 3 ஏக்கர்
இதன்படி அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டு இயங்கும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

>>>தொடக்கக்கல்வி - அரசின் திட்டங்கள் மற்றும் தரமான கல்வி வழங்குதல் தொடர்பான ஆய்வு இணை மற்றும் துணை இயக்குநர்களுக்கு பணிகள் பகிர்ந்தளிப்பு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் விலையில்லாப்பொருட்கள், இலவசக்கட்டாயக்கல்வி நடைமுறை, செயல்வழிக்கல்வி, படைப்பாற்றல் கல்வி, முப்பருவக்கல்வி, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான பணிகள் தொடக்கக்கல்வித்துறையில் இணை மற்றும் துணை இயக்குநர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி
  1. மதுரை மண்டலத்தில்  உள்ள - மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை இணை இயக்குநர்(நிர்வாகம்) அவர்களும்,
  2. சென்னை மண்டலத்தில்  உள்ள - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி   மாவட்டங்களை இணை இயக்குநர்(உதவி பெறும் பள்ளிகள்) அவர்களும்,
  3. திருச்சி மண்டலத்தில்  உள்ள - திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தருமபுரி மாவட்டங்களை துணை இயக்குநர்(நிர்வாகம்) அவர்களும்,
  4. கோயம்புத்தூர் மண்டலத்தில்  உள்ள - கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை துணை இயக்குநர்(சட்டம்) அவர்களும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.

>>>பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பது தொடர்பான அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் படிவம்... [SSA SPD's Proceedings and Format for Constitution of School Management Committee(SMC)]

>>>பங்கேற்பு ஓய்வு ஊதியத் திட்டம் - மத்திய அரசின் விளக்கம் [Contributory Pension Scheme (CPS) - Central Government Notification]

>>>பள்ளிக்கல்வி - ஆசிரியர்களின் விவரம் சேகரித்தலுக்கான படிவம் மற்றும் குறிப்புகள் [Tamilnadu School Education Teachers Profile Format & Instructions]...

>>>கணினி வழிக்கல்வி செயல்பாடுகள் - வலுப்படுத்த நடவடிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கணினிகள் வழங்கப்பட்டுள்ள தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் கணினி வழிக்கல்விக்காக தனி அறை ஒதுக்கீடு, கணினி வழிக்கல்விக்கான பாடவேளை அன்றாட கால அட்டவணையில் சேர்க்கப்பட்ட விவரம், குறுந்தகடுகள் மற்றும் கட்டகங்களின் பயன்பாடு குறித்து விவரங்கள் சேகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

>>>அரசு பள்ளி ஆசிரியர்களின் புலம்பல்...!

 
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்கப்பா
 தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் புலம்பல் இது ...

ஆசிரியர்கள் முன்பு ...
வகுப்பில் மாணவர் வருகையை பதிவு செய்வது , பாடமெடுப்பது , தேர்ச்சி குறைந்த மாணவர்களுக்கு கூடுதல் பாடம் எடுப்பது , உரிய விளக்கம் அளிப்பது, பள்ளி நிர்வாகப்பணி, தேர்தல் அலுவலர் ஆகியவற்றை நிறைவேற்றுபவர்.

ஆனால் தற்போது ...
மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பொறுப்பு, வங்கி கணக்கு துவக்கி தருவது, உதவித்தொகை பெற்று தருவது, இலவச புத்தகம், பை, ஜியோமெட்ரி பாக்ஸ், நோட்டு புத்தகம், காலணி, லேப்டாப், சீருடை, ரத்தவகை கண்டறிதல், ஜாதி மற்றும் வருமான சான்று பெற்றுத்தருதல், வாக்காளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் பணி, தொடர் மதிப்பீடு முறையில் மாணவர்களின் குறிப்பேடுகளை பாதுகாத்தல், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் எஸ் எஸ் ஏ அலுவலக குறிப்புகளை பாதுகாத்தல், இந்த பணிகளை முடித்த பின்பு நேரம் இருந்தால் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தல் என்ற நிலையில் தான் இன்று ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பள்ளியின் தேர்ச்சி விகிதமும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

இப்போ சொல்லுங்க அவங்க புலம்பறதுல நியாயம் இருக்குதில்லே...

தினமலர் நாலாம் பக்கத்திலிருந்து...

>>>இன்று ஒரு தகவல்....

மெட்ராஸ் பஞ்சம் {வரலாற்று சுவடுகள் }

சுமார் 375 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராசையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

1640இல் கிழக்கிந்திய கம
்பெனிக்காரர்கள் மதராசபட்டினத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.

1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ''இந்த சிறிய ஊரிலேயே 3000க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்'' என்று அந்த குறிப்பு சொல்கிறது.

இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சம் 1658இல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராசில் இருந்தால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686இல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.

அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும் பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.

1781இல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டினத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.

இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய ஸ்டான்லி மருத்துவமனை இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799இல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் ஸ்டான்லி மருத்துவமனையாக உயர்ந்தது.

19ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824இல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராசில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட்,இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.

இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.

* பஞ்ச காலத்தில் தானியங்களை பதுக்கியதற்காக நல்லண்ணா என்ற வியாபாரிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 25 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

* பஞ்சங்களால் 1825 முதல் 1854 வரை மெட்ராஸ் கடும் பொருளாதார பின்னடைவை சந்தித்தது.

>>>நவ.,4ல் மீண்டும் குரூப் 2 தேர்வு

ஈரோட்டில் குரூப் 2 வினாத்தாள் "அவுட்' ஆனதையடுத்து, நவ., 4ல் மாற்று தேர்வு நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்ய, மாவட்ட நிர்வாகங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், காலியாகவுள்ள நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு, கடந்த ஆக., 12ல் நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்விற்கான வினாத்தாள் ஈரோட்டில் ஒரு தேர்வு மையத்தில் வெளியானது. வினாத்தாள் வெளியானதால், இத்தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது. 
மீண்டும் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., இத்தேர்விற்கென, புதிதாக வினாத்தாள் தயாரித்துள்ளது. இந்த வினாத்தாளின் படி, மீண்டும், நவ.,4ல் தேர்வு நடக்கும் என அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, செய்யுமாறு, கலெக்டர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது. 
டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: வினாத்தாள் "அவுட்' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40 லட்சம் பேருக்கு மட்டும், தேர்வு நவ., 4ல் நடக்கிறது. இதில், புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதக்கூடாது. ஆக., 12ல் நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு' செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம், என்றார்.

>>>கிராமப்புற அரசு பள்ளி மாணவர் ஜப்பான் சுற்றுலாவுக்கு தேர்வு

கிராமப்புற பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர், கல்வித்துறை சார்பில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், அவிநாசி அருகே கருவலூரை சேர்ந்த சின்னசாமி - வள்ளியம்மாள் தம்பதி மகன் சங்கர், 16. கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 482 மதிப்பெண் பெற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றார். அதற்காக, கல்வித்துறை சார்பில் ஜப்பான் செல்ல தேர்வு பெற்றுள்ளார். தலைமையாசிரியர் திரு.சுப்ரமணியம் அவர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாவட்ட அளவில் முதலிரண்டு இடம் பிடிப்பவர்களை, வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. மாவட்டத்துக்கு தலா 2 பேர் வீதம், தமிழகம் முழுவதும் 64 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து வருபவர்கள் மட்டுமே வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில், தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர் சங்கர், ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து மொத்தம் ஆறு பேர், அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து ஜப்பான் செல்கின்றர். 20 நாள் பயணத்தில், அந்நாட்டின் கல்வி முறை, பாரம்பரியம், கலாசாரம், மாணவர்கள், வாழ்க்கை முறை குறித்து அறியவுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாவுக்கு, எங்கள் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் சங்கர் கூறுகையில், ""ஜப்பான் செல்ல கிடைத்த வாய்ப்பை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இதை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். பள்ளி கல்வித்துறை, தலைமையாசிரியர், பெற்றோருக்கு நன்றி,'' என்றார். மாணவர் சங்கர், ரோட்டரி கிளப் சார்பில் அமெரிக்காவின் "நாசா'வுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>>2,895 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து

ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, புதிய பட்டியலை தயாரிக்க, 30, 31 தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துகிறது. பள்ளிக் கல்வித் துறையில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலை, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், சமீபத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. இதற்கிடையே, தேர்வில், 20க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் குறித்து, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பி., வெளியிட்ட விடை மட்டுமில்லாமல், வேறு விடைகளும், குறிப்பிட்ட கேள்விகளுக்கு பொருந்துவதாக கூறி, அதற்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கில், தேர்வுப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், முதலில் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, டி.ஆர்.பி., 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ரத்து செய்துள்ளது. புதிய பட்டியலை தயாரிப்பதற்காக, 30, 31 தேதிகளில், 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: ஒரு இடத்திற்கு, இரண்டு பேர் வீதம், 6,282 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் வருகின்றனர். இவர்களில், 3,063 பேர், ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். எனவே, அவர்கள், 30, 31ல் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தேவையில்லை.
பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ள, 3,219 பேர் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும். நவ., 10 தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். தேர்வில், 23 கேள்விகளுக்கு, இரு விடைகள் சரியாக பொருந்துகின்றன. இதற்கு தகுந்தார்போல், விடைகளை மதிப்பீடு செய்து, புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் வெளியான, தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றவர்களில், எத்தனை பேர், அடுத்து வெளியாகும் புதிய பட்டியலில் இடம் பிடிப்பர் என, தெரியவில்லை. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "முதலில் தேர்வானவர்களில், பெரிய அளவிற்கு எவ்வித பாதிப்பும் வராது' என, தெரிவித்தன. 3,219 பேர், புதிதாக, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக் கப்பட்டிருப்பதன் மூலம், முதலில் வெளியான தேர்வுப் பட்டியல், அப்படியே வர வாய்ப்பில்லை.

>>>தனி தாசில்தாராக மாறிவிட்ட தலைமை ஆசிரியர்கள்...!

மாணவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் 16 நலத்திட்ட உதவிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால் தலைமை ஆசிரியர்கள் தனி தாசில்தாராக மாறிவிட்டனர். பணியாளர் பற்றாக்குறை காரணமாக இந்த வேலையில் ஆசிரியர்களையும் பயன்படுத்துவதால் படிப்பு பாதிப்படைகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை முன்னாள், இந்நாள் அரசுகள் வாரி வழங்கியுள்ளன. விலையில்லா பாடநூல், நோட்டு, மடிக்கணினி, மிதிவண்டி போன்ற விலையில்லா திட்டங்கள் 12, மற்றும் இடைநிற்றலை தடுக்க மாணவர்களுக்கு வைப்புத்தொகை பத்திரம், குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்துக்கு அரசின் நிதியுதவி, மாணவர்களுக்கு சாதி, வருவாய், இருப்பிட சான்று, ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளையும் பள்ளிகள் மூலம் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் ஆய்வக உதவியாளர், எழுத்தர் போன்ற ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 75 சதவீதம் காலியாக உள்ளன. சம்பள பில் தயாரித்தல், அதை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தல், நூலக பதிவேடு பராமரித்தல் போன்ற வேலைகளை ஆசிரியர்களே இப்போது கவனித்து வருகின்றனர். கூடுதலாக தொடர் மதிப்பீட்டு திட்டத்துக்கும் பல பதிவேடுகளை பராமரிக்கின்றனர். இந்நிலையில் 16 நலத்திட்டங்கள் அவர்களை பெரிதும் பயமுறுத்துகின்றன.

இது குறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இலவச பொருட்கள் வழங்குவதற்கு முன் பும், பின்பும் பட்டியல் தயாரிப்பது, விநியோகித்த விவரத்தை பதிவது போன்ற எழுத்து வேலைகள் உள்ளன. மடிக்கணினி வழங்கும் முன்பு மாணவரின் பெயர், முகவரி, வகுப்பு, பதிவெண், கணினி சீரியல் எண் போன்றவற்றை எழுதி தனி படிவம் தயாரிக்கவேண்டியுள்ளது. சாதி, வருவாய் சான்றிதழ்களுக்காக விண்ணப்பங்களை நிரப்பி, பெற்றோரிடம் அளித்து கையொப்பம் வாங்கி துணைத்தாசில்தாரிடம் பட்டியலில் கையொப்பம் பெற்று கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள் கையொப்பமிடுவதை பார்த்து பின்தொடர்ந்து சான்றிதழ் வாங்கி கொடுக்கவேண்டும்.

இதுநாள்வரை இச்சான்றிதழ்களுக்கு அன்பளிப்பு பெற்றுவந்த அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே சுணக்கம் ஏற்படுத்துகின்றனர். வங்கிகளில் மாணவர்கள் பெயரில் கணக்கு தொடங்குவதும் கஷ்டமாக உள்ளது
மாணவர்களின் போட்டோ, குடும்ப அட்டைகளை சேகரித்து, விண்ணப்பங்களை நிரப்பி, விவரங்களை பதிவேட்டில் எழுதிக்கொண்டு சென்றால் பல வங்கி கிளைகளில் அலைக்கழிக்கின்றனர். இதே போல் ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவிற்கும் அதிக சிரமப்பட வேண்டியுள்ளது. இது தவிர, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தொழிலாளர் கல்வி உதவித்தொகைகள் வழங்குவது தனி வேலை. மொத்தத்தில் பெற்றோர் பாரத்தை அரசு எங்கள் தோள்களில் ஏற்றியுள்ளது" என்றார்.

காலத்துக்கு உதவாதவை:
அறுசுவை உணவுக்கு பலவகை கூட்டுகள் போல் 16 நலத்திட்ட உதவிகள் பரவசப்படுத்தினாலும், இதுவரை பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடைகள் மட்டுமே அதுவும் முதல் பருவம் முடியும் தருவாயில் வந்து சேர்ந்துள்ளன. மிதிவண்டிகள் வந்தும் அரசியல் பிரமுகர்களை முன்னிறுத்தி வழங்கவேண்டியிருப்பதால் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மாணவர்களுக்கான மடிக்கணினிகளே இன்னமும் கை சேரவில்லை. படிப்புக்கு பயன்படவேண்டிய பை, வண்ண பென்சில்கள், உலக வரைபடம், கணித உபகரணங்கள் மற்றும் செருப்பு இன்னமும் வந்து சேரவில்லை. காலத்தில் உதவாத பொருட்களால் மாணவர்களுக்கு பயனில்லை. தேவையை கருதி பெற்றோர்கள் இப்பொருட்களை ஏற்கனவே வாங்கி விட்டனர்.

விலையுள்ள பொருட்கள்:
அரசு விலையில்லா பொருட்கள் என அறிவித்தாலும், மாணவர்கள் சிறிய விலை கொடுத்தே புத்தகம், சீருடை போன்றவற்றை வாங்குகின்றனர். இப்பொருட் களை கல்வி அலுவலகங்களிலி ருந்து எடுத்துவரும்போது சில அலுவலர்கள் ரூ.300 முதல் 500 வரை வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது மட்டுமின்றி, அங்கிருந்து எடுத்துவர ஆகும் செலவை மாணவர்களிடம் சில பள்ளிகள் வசூலித்து ஈடுகட்டுகின்றன.

>>>அக்டோபர் 25 [October 25]....

  • கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
  • விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது(2001)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
  • ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)

>>>அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள் !!

காலை உணவைத் தவிர்க்காதீர்!
பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள். இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

காபி, டீ குறையுங்கள்!
காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.

வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி
அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!

>>>இன்று ஒரு தகவல்....


மாவீரன் நெப்போலியன் பற்றிய தகவல் !!!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போ
லியன் ஒரு பிரெஞ்சு பிரளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல்முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு. ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்'. 1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன். 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார். 1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812. நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரணடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கேயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன். கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது. பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Neppolian என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது. சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது. “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது. “முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை மட்டும் தான் "

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of winners of Thirukkural competitions

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு List of winners of Thirukkural competitions >>> தரவிறக்கம் ச...