கருத்துகளை விட உறவுகள் முக்கியம்
சில விஷயங்களை குடும்பத்தினரோடும், உறவினர்களோடும், நண்பர்களோடும், சமூக வலைதளங்களிலும் அளவுக்கதிகமாக விவாதிக்காமல் கடந்து செல்வதே நல்லது என்று தோன்றுகிறது.
அரசியல், சமூகம், மதம், சாதி, மொழி, சினிமா, தலைவர்கள், பிரபலங்கள் என பல விஷயங்களில் கருத்துக்கள் இன்று வெறும் கருத்துக்களாக இல்லை; அவை பலரின் அடையாளமாகவும் நம்பிக்கையாகவும் மாறிவிட்டன. அதனால் அவர்களின் கருத்தை மறுத்தால், அவர்களையே மறுப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள்.
பிரச்சனை கருத்து வேறுபாட்டில் இல்லை. “நான் தவறாகவும் இருக்கலாம்; எதிரில் இருப்பவர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம்” என்ற மனப்பக்குவம் குறைந்து வருவதில்தான் இருக்கிறது. தங்களுக்கு சாதகமான தகவலை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்; எதிரான உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை.
இதனால் பெரும்பாலான விவாதங்களின் முடிவில் யாருடைய கருத்தும் மாறுவதில்லை. ஆனால் பரஸ்பர மரியாதை குறைகிறது; நட்பு பாதிக்கப்படுகிறது; உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது. கருத்துக்கள் அப்படியே இருக்கின்றன; உறவுகள் மட்டும் மாறிவிடுகின்றன.
எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லோரிடமும் நமது உண்மையை நிரூபிக்க வேண்டிய கடமையும் இல்லை. சில நேரங்களில் அமைதி தோல்வியல்ல; அது பக்குவம்.
ஒவ்வொரு வாதத்திலும் வெற்றி பெறுவதைவிட, நல்ல உறவுகளைப் பாதுகாப்பது முக்கியம். கருத்துக்களைவிட மனிதர்கள் முக்கியம். கேட்கத் தயாரில்லாதவரிடம் உண்மையை நிரூபிக்க முயல்வதைவிட, புன்னகையுடன் கடந்து செல்வதே சில நேரங்களில் சிறந்த பதில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.