Rainbow Valley : எவரெஸ்ட் சிகரத்தின் கருப்புப் பக்கம்
இளகிய மனம் கொண்டவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்
எவரெஸ்ட் மற்றும் பிற 8,000 மீட்டர் சிகரங்களின் மரண மண்டலத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் கீழே கொண்டு வரப்படுவதில்லை. ஏன்? பார்க்கலாம்.
வானவில் (அ) ரெயின்போ என்ற சொல்லைக் கேட்டதும் நமது மனதில் மெல்லிய சாரல் மழையும், வானத்தில் தோன்றும் அழகிய அரை வட்டமும் நினைவுக்கு வரும். சிலருக்கு பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும் நினைவுக்கு வரலாம்.
ஆனால் பல வண்ண உடையணிந்த இறந்த உடல்கள் விழுந்து கிடக்கும் இடம் நினைவுக்கு வருமா? வந்தால், உங்களுக்கு எவரெஸ்ட்டின் கொடூரமான இன்னொரு பக்கம் தெரிந்திருக்கிறது என்று பொருள்.
எட்டாயிரத்துச் சிகரங்களில் சுமார் 6,000 முதல் 6,400 மீட்டர் உயரம் வரை, அதாவது பேஸ் கேம்ப், கேம்ப் 1 மற்றும் கேம்ப் 2 வரை உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்புக் குழுவினராலும் ஹெலிகாப்டர்களின் உதவியோடு கீழே கொண்டுவர முடியும். இந்த உயரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காற்றின் அடர்த்தி ஓரளவுக்குச் சாதகமாக இருப்பதால் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
மரண மண்டல எல்லை, அதாவது, 7,000 மீட்டருக்கு மேல், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருவது என்பது ஏறக்குறைய இயலாத ஒன்று. அதிலும், 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 'மரண மண்டலத்திற்குள்' (Death Zone) உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருவது சாத்தியமே இல்லாதது.
8,000 மீட்டருக்கு மேல் நிலவும் மைனஸ் 30°C முதல் மைனஸ் 50°C வரையிலான கடுமையான குளிரில், மனித உடல் சில மணி நேரங்களிலேயே பனியோடு சேர்ந்து பாறை போல உறைந்துவிடும்.
சாதாரண நிலையில் 70 முதல் 80 கிலோ இருக்கும் ஒரு மனித உடல், உறைந்த பனி, அணிந்திருக்கும் தடிமனான உடைகள் மற்றும் பனிப்பாறைகளோடு பிணைக்கப்படும்போது 150 முதல் 200 கிலோ வரை எடைகூடிவிடும். பாறையோடு பாறையாக உறைந்திருக்கும் அந்த உடலைப் பிரித்தெடுப்பதே மாபெரும் சவாலாக இருக்கும்.
8,000 மீட்டருக்கு மேல் காற்றில் ஆக்சிஜன் அளவு 33% மட்டுமே இருக்கும். அங்கே இருக்கும் மீட்புக் குழுவினர், பெரும்பாலும் ஷெர்பாக்கள், ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதே கடுமையான சவாலாக இருக்கும்.
அந்தச் சூழலில் ஒரு சிறிய பையைத் தூக்குவதே 50 கிலோ எடையைச் சுமப்பது போலிருக்கும். அப்படி இருக்கும்போது 200 கிலோ எடையுள்ள உறைந்த உடலைச் செங்குத்தான, பனி நிறைந்த பாதையில் தூக்கி வருவது மீட்பவர்களின் உயிரை நேரடியாகப் பலிகொடுப்பதற்குச் சமம்.
இத்தகைய சவால்களை முன்வைத்துக்கொண்டு, ஒரு உடலைக் கீழே கொண்டு வர முற்படும்போது பல மீட்பு வீரர்களே உயிரிழந்த வரலாறுகளும் உண்டு.
சரி. மனிதனால் முடியாது என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஹெலிகாப்டர் கொண்டு உடலை மீட்டு வரலாம் அல்லவா என்று தோன்றுகிறதா?
8,000 மீட்டருக்கு மேல் வளிமண்டலக் காற்றின் அடர்த்தி (Air Density) மிக மிகக் குறைவாக இருக்கும். இதனால் ஹெலிகாப்டரின் விசிறிகள் (Rotor Blades) சுழல்வதற்குத் தேவையான 'காற்றழுத்தத் தூக்குவிசை' (Lift) கிடைக்காது.
எவரெஸ்ட்டில் பொதுவாக 6,400 மீட்டருக்கு மேல் (Camp 2-க்கு மேல்) ஹெலிகாப்டர்களை இயக்குவது மிகவும் ஆபத்தானது; சிகரத்தின் உச்சிக்கு அருகில் ஹெலிகாப்டரைத் தரையிறக்குவதோ அல்லது நிறுத்தி உடலைத் தூக்குவதோ சாத்தியமே இல்லாத ஒன்று. (அப்படி மீட்க முடிந்தால், இறப்பையே தவிர்க்கவும் முடியுமே!!)
இத்தகைய ஆபத்தான சூழலையும் மீறி ஒரு உடலைக் கீழே கொண்டு வர வேண்டுமென்றால், சுமார் $70,000 முதல் $1,00,000 வரை செலவாகும். இதற்காக 6 முதல் 10 அனுபவமிக்க, பலசாலிகளான ஷெர்பாக்களை நியமிக்க வேண்டும். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துதான் இந்த மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
உறைந்த உடலை இழுத்து வரும்போது மீட்புக் குழுவினரால் வேகமாக நகர முடியாது. மரண மண்டலத்தில் ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்கும்போது எதிர்பாராத பனிப்புயல் அல்லது பனிச்சரிவு ஏற்பட்டால், உடலை மீட்கச் சென்ற ஒட்டுமொத்தக் குழுவுமே பலியாகிவிட வாய்ப்பிருக்கிறது. (1984-இல் ஹானலோர் ஷ்மாட்ஸ் உடலை மீட்க முயன்று இருவர் பலியானது பற்றி நாம் முன்னரே பார்த்தது நினைவிருக்கலாம்.)
இதன் காரணமாகவே, எவரெஸ்ட்டில் உயிரிழந்த 330-க்கும் மேற்பட்டோரில் 200-க்கும் அதிகமான உடல்கள் மலையிலேயே கைவிடப்பட்டுள்ளன. அவை காலப்போக்கில் அழுகாமல், அப்படியே உறைந்துபோய் இருக்கின்றன.
மரண மண்டலத்தில் இயற்கை மனிதனுக்கு அளிக்கும் தண்டனை மிகவும் கொடூரமானது. அங்கே உயிர் பிரிந்தால், ஆன்மா மட்டுமே பிரியும்; உடல் மலையோடும் பனியோடும் ஒன்றிணைந்து என்றென்றும் அந்தப் பனிமலையின் நிரந்தரக் காவலனாகவே மாறிவிடும்.
அப்படியான ஒரு இடம்தான் ரெயின்போ வேலி (Rainbow Valley).
எவரெஸ்ட் சிகரத்தின் வடக்குப் பாதையில் (North Ridge), சுமார் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள மரண மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட சரிவுப் பகுதிதான் இது.
எவரெஸ்ட்டில் ஏறி உயிரிழந்து, கீழே கொண்டுவர முடியாமல் அங்கேயே உறைந்துபோன மனித உடல்கள் பல பத்தாண்டுகளாக இந்தப் பகுதியில் குவிந்து கிடக்கின்றன.
அந்த இறந்த உடல்கள் அணிந்திருக்கும் சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களிலான நவீன மலையேற்ற உடைகள் உறைபனிக்கு நடுவே பிரகாசமாகத் தெரியும். அந்த இடத்துக்கு மலையேற்ற வீரர்களால் வைக்கப்பட்ட ஒரு நக்கல் கலந்த அதிர்ச்சிகரமான பெயர் தான் ரெயின்போ வேலி.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைக் காணச் செல்லும் வீரர்கள் கடந்து செல்ல வேண்டிய மரணத்தின் வண்ணமயமான மயானம் தான் இந்த ரெயின்போ வேலி. இந்த இடம் ஒவ்வொரு மலையேற்ற வீரருக்கும், மலையின் கொடூரமான யதார்த்தத்தை நினைவூட்டும் ஒரு எச்சரிக்கைப் பலகை எனலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.