TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும், அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளரின் பதிவு
ஆசிரியச் சொந்தங்களுக்கு வணக்கம்…
TET தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து, பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்கள் வழியாகவும், ஆசிரியர்களின் What’s App குழுக்கள் வழியாகவும் வந்துகொண்டே இருக்கின்றன..
அரசுப்பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளியில் பணிபுரிபவர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்பதால் இதனைப்பற்றிய ஒரு தெளிவான கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்..
இந்த தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த வழக்கில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்னும் நிலைப்பாட்டுடன்தான் தமிழ்நாடு அரசும்,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இந்த வழக்கில் தொடர்ந்து இருந்து வந்தனர்.
தற்போது தீர்ப்பு சாதகமாக வராவிட்டாலும் கூட, தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் எந்த ஆசிரியரும் பாதிக்கபட மாட்டார்கள். அதற்குத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்போம். அது சட்டப்பூர்வமாக இருந்தாலும் சரி, அரசின் நிலைப்பாடாக இருந்தாலும் சரி என ஊடகங்கள் வழியே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களைப் பாதுகாக்கும் அரணாக இருப்போம் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னது தவிர,
தமிழ்நாடு அரசோ, நமது பள்ளிக்கல்வித்துறையோ இதுகுறித்த எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஊடகங்களில் வரும் யூகங்களுக்கும், அரசியல் ரீதியாக வரும் எதிர்மறையான பரப்புரைகளுக்கும் ஆசிரியர்கள் யாரும் இடம்கொடுக்காமல், எவ்வித பதட்டமுமின்றி தங்களது பணியினை வழக்கம்போல தொடருவோம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நம்மை காக்கப்போவது நமது தமிழ்நாடு அரசின் திட்டமிடலும், நமது பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகளுமே ஆகும். எனவே இதுசார்ந்த நிலையில் அரசு எடுக்கப்போகும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதும், இதனை பொறுமையாக எதிர்கொள்வதுமே நமது செயல்பாடாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களால் வளர்ந்தவன் நான் எனச் சொல்பவர் நம் அமைச்சர் . அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பள்ளிக்குள் சென்றாலும் ஆசிரியர்களின் இருக்கையில் அமராமல் வேறொரு இருக்கையில் அமர்ந்து, ஆசிரியர்களின் மாண்பைப் போற்றி வருகின்ற நம் அமைச்சரும், நம் அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள்..
நன்றி
சிகரம் சதிஷ்குமார்
ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்