கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.03.2026 

கிழமை:- செவ்வாய்



திருக்குறள்: 

குறள் 613:

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.             

 
விளக்க உரை:

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.


பழமொழி :
The childhood shows the man.   

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1.   திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2. எனவே  ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.


பொன்மொழி :

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் - சாக்ரடீஸ்


பொது அறிவு :

01.உலகின் மிக வேகமான பறவை

எது?

பெரெக்ரின் ஃபால்கன் -

Peregrine Falcon

02.அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

       பாதரசம் - Mercury


English words :

Grave-serious

Put up with -tolerate


தமிழ் இலக்கணம்:

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2

1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன)

      மல்லிகை   மணம் கமழ்கிறது –சரி

2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா)

      மாறன் கண் விழித்தான்

 
அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்படையான வெளிப்பாடுதான்  காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும்.


மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்

சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.



நீதிக்கதை

வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள்.

அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது.

இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.


இன்றைய செய்திகள்

10.03.2026

⭐தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

⭐உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

⭐ இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

⭐அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.


Today's Headlines

⭐ In Tamilnadua digital population census will be conducted from July 17 to August 30

⭐ A 3,000-year-old wonder was discovered in Udumalai. A massive stone structure has been identified at Kallapuram

⭐ To prevent  cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

⭐ Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

*SPORTS NEWS*

🏀The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...