Guy Goma - BBCன் சுவாரசியமான Blooper
'யானைக்கும் அடி சறுக்கும்' என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 'டைனோசருக்கே அடி சறுக்கிய கதை' ஒன்று உள்ளது. தெரியுமா?
2006ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி BBC தொலைக்காட்சியில் நேரலையாக ஆண் ஒருவரை - பெண் தொகுப்பாளர் ஒருவர் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.
ஆனால் பேட்டி கொடுத்தவர் பிதுங்கப் பிதுங்க முழித்துக் கொண்டு, கொஞ்சம் குழப்பத்துடன் பதிலளிக்கத் தொடங்கினார்.
தொகுப்பாளர்: வணக்கம், 'நியூஸ் வயர்லெஸ்' என்ற தொழில்நுட்ப இணையத்தின் ஆசிரியர் கை கியூனி நம்முடன் இணைந்திருக்கிறார். குட் மோர்னிங்
பேட்டி கொடுப்பவர்: குட் மோர்னிங்
தொகுப்பாளர்: இன்று வந்த தீர்ப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததா?
பேட்டி கொடுப்பவர்: இந்தத் தீர்ப்பு வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் உள்ளே வந்தபோது, அவர்கள் என்னிடம் - வேறு ஏதோ சொன்னார்கள். உள்ளே வாருங்கள் உங்களோடு ஒரு நேர்காணல் இருக்கிறது என்றார்கள். எனவே, இது எனக்கு மிகப்பெரியதொரு ஆச்சரியம்தான்.
இப்படி அந்தப் பேட்டி நீண்டு கொண்டு சென்றது.
தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு, பேட்டி கொடுத்தவர் தயங்காமல் பதிலளித்துக் கொண்டு வந்தார்.
சரி, இதில் என்ன 'சறுக்கல்' இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்.
இந்த பேட்டியைக் கொடுத்தவர் பெயர் கய் கோமா (Guy Goma). அவர் BBCஇல் IT தொடர்பான வேலையொன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.
அன்றையதினம் நியூஸ் வயர்லெஸ் என்ற தொழில்நுட்ப இணையத்தின் ஆசிரியர் கை கியூனி என்பவர், நேர்காணல ஒன்றுக்காக பிபிசிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், கை கியூனி என நினைத்து, அங்கு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த கய் கோமவை அழைத்துச் சென்று - நேடியாக BBC பேட்டி கண்டது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், கய் கோமா சற்றும் தயங்காமல் - கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆயினும் அவருடைய முகபாவனைகள் மற்றும் குழப்பமான பதில்கள் - ஏதோ தவறு நடந்து விட்டது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தின.
பிறகு இந்தச் சம்பவத்தை வைத்து இணையத்தில் ஏராளமான 'மீம்ஸ்' உருவாகின.
'இதுதான் BBCயின் மிகச் சிறந்த மோசமான நேர்காணல்' என்று, பிபிசியே பின்னாளில் குறிப்பிட்டது.
பின்னர், அந்த நபரை - பல தொலைக்காட்சிகள் அழைத்துப் பேட்டி கண்டன. அதன் பிறகு பிபிசியும் அழைத்து பேட்டி கண்டது.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அவர் நேர்முகத் தேர்வுக்காகச் சென்ற தொழில், அவருக்குக் கிடைக்கவில்லை.
இவ்வாறு தவறுதலாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட கய் கோமா (Guy Goma) கொங்கோ நாட்டைச் சேர்ந்தவர். 2001ஆம் ஆண்டு அவர் உள்நாட்டு போரிலிருந்து தப்பி, பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.
அவரின் அந்த தவறுதலான பேட்டியின் ஒரு சிறிய துண்டை, பிபிசி தமிழ் - பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
அதைப் பார்த்து விட்டு, இணையத்தில் மேலதிக விடயங்களைத் தேடிய போது, அது குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன.
தவறு எங்கும் நடக்கும். அதை ஏற்றுக் கொண்டு, பிபிசியே தன்னைக் கிண்டல் செய்திருப்பதுதான் இங்கு சுவாரசியம்.
#GuyGoma #BBC #interview

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.