கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எப்போதாவது மது குடிப்பது தவறா? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா



 எப்போதாவது மது குடிப்பதும் தவறா? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


மதுவை அளவுடன் பருகினால் இதயத்துக்கும் உடல் நலத்துக்கும் நல்லது என்ற கற்பிதம் நமது சமூகத்தில் எங்கும் வியாபித்து இருக்கிறது. 


இதை மருத்துவ அறிவுரை என்று நம்பி, பலரும் அவ்வப்போது அளவாக மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டு வருகின்றனர். 


மது அருந்துதல் குறித்து இன்னும் பற்பல கட்டுக்கதைகளும் நம்மிடையே நிலவி வருகிறது. அவற்றை அறிவியல் துணை கொண்டு தகர்ப்போம். 


20ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஒப்பீட்டளவில் தரம் குறைவான, கண்காணிப்பு சார்ந்த ஆய்வுகளின் ( OBSERVATIONAL STUDIES) படி குறைவான அளவு மது அருந்துவது இதயத்துக்கு நல்லது என்பது போன்ற கருத்து வெளிப்பட்டது. 

அது மருத்துவ ரீதியாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும், 21ஆம் நூற்றாண்டில் 

RCT ( Randomised controlled trials) எனும் தரத்தில் திறன் மிக்க ஆய்வுகள் செய்யப்பட்டதில் மதுவுக்கும் இதய நலனுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், மாறாக எவ்வளவு குறைவாக மது அருந்தினாலும்,  மார்பகம், குடல் , உணவுக் குழாய் சார்ந்த புற்று நோய் ஏற்படுவதற்கும், கல்லீரல் நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கின்றன ஆய்வுகள். 


தற்கால மருத்துவ அறிவியல் உண்மை யாதெனில் "எவ்வளவு குறைவான அளவு மது அருந்தினாலும் அது பாதுகாப்பான அளவு இல்லை" என்பதே ஆகும். 


மதுவில் இருக்கும் எத்தனால் எனும் ஆல்கஹால்  - க்ரூப் -1  கார்சினோஜென் ( புற்றுநோய்க்காரணி) என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளில்  அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மதுவை அருந்தாதவர்களை விட மதுவை அருந்துபவர்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதும் உண்மை. 


இன்னும் பலர், எப்போதாவது நண்பர்கள் சேரும் போது, திருமண வைபவங்களின் போது, கம்பெனி க்ளையண்ட் பார்ட்டிகளின் போது 

மது அருந்தினால் பிரச்சனை இல்லை. அது பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கின்றனர். அந்த எண்ணமும் தவறானதாகும். 


இவ்வாறு எப்போதாவது மது அருந்தும் போது அளவுக்கு அதிகமாக மதுவை அருந்தும் போக்கு பலரிடையே உள்ளது. 

இதை "பிஞ் ட்ரங்கிங்" (BINGE DRINKING) என்கிறோம். 


குறுகிய நேரத்தில் இரத்தத்தில் அதிகமான அளவு ஆல்கஹால் சேரும் போது, கல்லீரல் ஸ்தம்பித்துப் போகிறது. 


ஆல்கஹாலை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி அதனை 

கிரகிக்கும் தன்மை கல்லீரலுக்கு மட்டுமே இருக்கிறது. 

எனினும் அளவுக்கு மிஞ்சிய அளவு மது அருந்தப்படும் போது

கல்லீரலுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. 


நமது

 சிறுநீரகங்களாலும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்கஹாலை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்ற முடியும். 

குறுகிய நேரத்தில் அதிகமான அளவு ஆல்கஹால் இரத்தத்தில் கூடும் போது, 

இதயம் சீர்கெட்டுத் துடிக்கவும், இரத்த அழுத்தம் உயரவும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக 

ஹார்ட் அட்டாக் எனப்படும் இதய ரத்த நாள அடைப்பு, ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு கூடுகிறது. 


இளைஞர்களுக்கும் மத்திய வயதினருக்கும் 

ஏற்படும் பெரும்பகுதி மாரடைப்பு சார்ந்த மரணங்கள், மதுவின் போதையில் நிகழ்வதைக் காண முடிகின்றது. 


மது அருந்த ஆரம்பித்த காலத்தில்  குறைவான அளவு பருகும் ஒருவரே,  காலப்போக்கில் அளவைக் கூட்டிக் கொண்டே செல்லும் போக்கையும் காணலாம். 

இதற்குக் காரணம் 

"மதுவினால் ஏற்படும் சகிப்புத் தன்மை" (TOLERANCE)  ஆகும்.


ஆரம்பத்தில் ஒருவர் 90 மில்லி அளவு மது அருந்தினால் கிடைக்கும் போதை 

நாளடைவில் கிடைக்காமல் போகும். போதை கிடைப்பதற்காக வேண்டி மதுவின் அளவை 90 இல் இருந்து 180 மில்லி அதன் பிறகு 360 மில்லி என்று உயர்த்திக் கொண்டே செல்வார். இது தான் மது விரிக்கும் மாய வலையாகும். இந்த வலையில் வீழ்ந்து வாழ்க்கையை இழந்தோர் பலர். 


சமூகத்தில் நிலவும் மது சார்ந்த கற்பிதங்களில் அடுத்தது, பீர் மற்றும் வைன் ஆகியவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் அவற்றைப் பருகுவது பெரிய பிரச்சனை இல்லை என்பதாகும்.


பீர் வகை மதுவில் 

5-6% ஆல்கஹால் இருக்கும். 

வைன்களில் 10-15% ஆல்கஹால் இருக்கும். 

டிஸ்டில்டு ஸ்பிரிட் என்று அழைக்கப்படும் வோத்கா வகைகளில் 40% க்கு மேல் ஆல்கஹால் இருக்கும். 


ஆனால் இவற்றைப் பருகும் ஒருவர், பீர் என்றால் 350 மில்லியும், வைன் என்றால் 150 மில்லியும், வோட்கா என்றால் 45 மில்லியும் பருகுகிறார் என்று வைத்துக் கொள்வோம். 


மூன்றும் வெவ்வேறு வகை மது என்றாலும் இவற்றின் அளவில் மாறுபட்டாலும் கூட 

மூன்றிலும் இருக்கும் ஆல்கஹாலின் அளவு என்பது தோராயமாக 14 கிராம்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


பீராகவே இருந்தாலும் அது பாதிப்பு தராது என்ற எண்ணத்தில் போதை ஏறுவதற்காக 

இரண்டு மூன்று பீர்களை ஒரே நேரத்தில் அருந்துவபர்கள் உண்டு. 


இவ்வாறு அருந்தும் போது ஆல்கஹால் அளவுகள் இரத்தத்தில் அதிகரித்து அதனால் 

சிந்தனைப் பிறழ்வு, பார்வைக் கூர்மைக் குறைபாடு, மறதி , முடிவெடுப்பதில் சிக்கல் போன்றவை ஏற்பட்டு வாகனங்களை இயக்கும் போது அதிகமான விபத்துகள் நேர்ந்து வருகின்றன. நிகழும் வாகன விபத்துகளில் கணிசமானவை மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படுபவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


பீர் அருந்தினால் குளிர்ச்சி எனவும், 

இப்போது நிலவும் எல் நினோ போன்ற வெப்பமான சூழ்நிலைகளில் பீர் அருந்துவது நல்லது போன்ற மூடக்கருத்துகளும் பரவி வருகின்றன. 


உண்மையில் பீர் அருந்தினால் சிறுநீர் முன்பை விட வெகுவாக வெளியேறும். சிறுநீர் அதிகமாக வெளியேறும் போது நீரிழப்பு ஏற்படும். கூடவே முக்கியமான தாது உப்புகளும் வெளியேறும். இதனால் வெப்ப அயர்ச்சிக்கும் வெப்ப வாதத்துக்கும் உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்குமே அன்றி குறையாது. 


சிலர் நாட்டு சரக்கு நல்லது. இயற்கையானது. பாதுகாப்பானது என்ற தவறான எண்ணத்தில் அதை வாங்கிக் குடிப்பதையும், அதனால் பாதிப்புக்கு உள்ளாவதையும் நாம் கண்டு வருகிறோம். 


ஊரகப் பகுதிகளில் காய்ச்சப்படும் மலிவு விலை கள்ளச் சாராயத்தில் சுத்தீகரிப்பு முறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் எத்தனாலுடன் மெத்தனாலும் சேர்ந்து உற்பத்தி ஆகிவிடும். மெத்தனால் என்பது எரி சாராயமாகும். 

இந்த எரி சாராயத்தைப் சிறிதளவு பருகினாலே நிரந்தரமாகக் கண்பார்வை பறிபோகும். மூர்ச்சை நிலை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். 

எனவே கள்ளச் சாராயத்தில் இருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். 


இன்னும் சிலர், பனங்கள்ளு என்பது செயற்கையாக தொழிற்சாலைகளில்  உருவாக்கப்படும் மதுவிற்கு மாற்று என்று நம்புகின்றனர். 

அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் - பனை, தென்னை, பேரீச்ச மரம் உள்ளிட்டவற்றின் சாறில் இருந்து அது நொதித்து உருவாகும் பொருளே "கள்" ஆகிறது. கள் என்பதும் ஒருவகை மதுவே ஆகும். 

அதிலும் 5 முதல் 8% ஆல்கஹால் உண்டு. 

எனவே, மதுவை கைவிட நினைப்பவர்கள் அனைத்து வகை மதுவையும் ஒருசேரக் கைவிடுவதே சிறந்தது. 


இன்னும் கடினமான பணி புரிவோர், தாங்கள் செய்யும் பணியின் காரணமாக ஏற்படும் உடல் வலிக்கு மது அருந்துவதாக சாக்கு போக்கு கூறுவர். 


மிகக் கடினமான பணிகளைச் செய்யும் பெரும்பான்மை பெண்கள் யாரும் மது அருந்துவதில்லை. எனவே, கடுமையான பணி செய்வது மது அருந்துவதற்கு சாக்காகாது. 


மது அருந்தி விட்டு கடுமையான பணி புரியும் போது 

புத்திக் கூர்மையின்மை காரணமாக பணியிடத்தில் விபத்துகள் நிகழும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

வெயிலில் கடுமையான பணி செய்யும் போது மதுவின் காரணமாக, நீரிழப்பு அதிகரித்து வெப்ப வாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது . 


மதுவினால்  புத்திக் கூர்மை அதிகரித்து சிந்திக்கும் திறன் கூடுகிறது என்பது போன்ற கட்டுக் கதைகள் கலை இலக்கிய வட்டாரங்களில் உண்டு. அதிகமாக சிந்தித்து எழுதுபவர்கள் மது அருந்தினால் அந்த ஆற்றல்  கூடுவது போன்ற மாய பிம்பத்தில் சிக்கிக் கொள்வர். ஆனால் அடிப்படையில் மது என்பது மூளை உள்ளிட்ட  மத்திய நரம்பு  மண்டலத்தின் செயல்திறனைக் குறைக்கும் ஒரு பொருளாகும். 

ஆல்கஹால் என்பது மூளையின் ப்ரீ ஃப்ராண்டல் கார்டெக்ஸ் எனப்படும் சிந்தித்துச் செயலாற்றும் மண்டலத்தைப் பாதிக்கிறது. 

இதனால் தொடர மது அருந்துபவர்களுக்குமூளை சுருக்கம் ஏற்பட்டு மறதி நோய் வரும் வாய்ப்பு கூடுகிறது. 

சிந்திப்பதற்காகவும் 

கற்பனைத் திறன் கூறுவதாகவும் தவறாக நம்பி மதுவில் மூழ்கிய பலர் 

கல்லீரல் செயலிழந்து மரணித்து வரலாறு எங்கிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது ஜாக்கிரதை . 


இறுதியாக இணையரில் ஒருவரோ இருவரும் மது அருந்தி விட்டு இணை சேரும் போது 

அதில் அலாதி இன்பம் கிடைப்பதாக ஒரு கட்டுக்கதை உள்ளது. 

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல மது என்பது மூளையை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு பொருளாகும். 

அப்படியிருக்க மதுவின் போதையில்

இருக்கும் போது 

இன்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறியாத நிலையே இருக்குமே அன்றி அது மெய்யான இன்பத்தைத் கூட்டுகிறது என்பது கட்டுக்கதையே ஆகும். 

இன்னும் சொல்லப்போனால் மது அதிகமாக அருந்தும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுகிறது. 

மது அருந்தும் பெண்களுக்கு யோனி வறட்சி, ஹார்மோன்களில் கோளாறு ஏற்படுகிறது. 


இவ்வளவு பிரச்சனைகளைக் கொண்டு வரும் மதுவை அறிவே விட்டொழிப்பதே சிறந்த தீர்வாகும். 

மது எனும் சுழலில் சிக்கி திசை இழந்த பலரை நாள்தோறும் கண்டுவருவதால் கூறுகிறேன். 

மதுவினால் துளி நன்மையும் கிடையாது. 

சிறிதளவு மது கூட பெரிய கேடுகளைக் கொண்டு வரும். 


தினசரி மது அருந்தும் பலர் கூட 

தாங்கள் மதுவுக்கு அடிமை இல்லை என்றே தவறாக நம்புகின்றனர். 

மது உங்களை அடிமைப்படுத்தும் முன் அதிலிருந்து விலகி விடுவது நல்லது. 

ஒருவேளை மது உங்களை அடிமைப்படுத்தியிருப்பின் உடனடியாக செயல்பட்டு "மது அடிமை நோய்க்கு" எதிரான சிகிச்சையை தகுதியான மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றால் முற்றிலும் இதிலிருந்து விடுபட முடியும். 


இன்றே முடிவு செய்வோம்.

நலமான வாழ்க்கையா? 

மதுவா? என்று காரணம் இரண்டும் ஓரிடத்தில் இருக்க முடியாது. 

நல்லதையே தேர்வு செய்வோம். 


நன்றி


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்