ரயில் டிக்கெட் முன்பதிவு நாட்கள் 120ல் இருந்து 60ஆக குறைப்பு.
நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அவகாசம் 120 நாட்களில் இருந்து 60ஆக குறைப்பு - இந்திய ரயில்வே.
120 நாட்கள் அவகாசத்தின் கீழ் அக்.31 வரை முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட்டுகள் செல்லுபடியாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை, 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் முறை தற்போது உள்ளது. இந்த டிக்கெட்டை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இணையதளம் மூலமாகவும், ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து, பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்ய இந்த காலவரம்பு பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இது நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். இது, நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இருப்பினும், அக்.31-ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் காலத்தின் கீழ், அனைத்து முன்பதிவுகளும் அப்படியே இருக்கும். இதுபோல, நவ.1 ம் தேதிக்கு முன்பாக, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை 60 நாட்களுக்குப் பிறகும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. குறிப்பிட்ட பகல்நேர விரைவு ரயில்களான லைம் தாஜ் விரைவு ரயில், கோம்தி முன்பதிவு செய்வதற்கான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.