பலத்த ஒலியின் விளைவால்
உத்திர பிரதேசத்தில்
பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை உயிரிழந்துள்ளது செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
குழந்தையை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக.
பிறந்த 20 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை
உத்திரபிரேதசத்தில் தனது தாயுடன் இருக்கையில், வெளியே தெருவில்
பலத்த ஒலி எழுப்பும் வாகனம் 30 அடி தூரத்தில் இருந்து அதீத ஒலியை எழுப்பவே அரண்டு போய் கதறி அழுகத்துவிங்கியிருக்கிறது. பிறகு சில நிமிடங்களில் பேச்சு மூச்சின்றி மூர்ச்சையாகி இருக்கிறது. மருத்துவமனைக்கு இட்டுச் செல்லும் போது குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது.
பலத்த ஒலி உயிரைக் கொல்லும் அளவு ஆற்றல் கொண்டதா?
நேரடியாக ஒலிக்கு நமது திசுக்களில் பாதிப்பையோ அழிவையோ ஏற்படுத்தும் திறன் இல்லை எனினும் மறைமுகமாக உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதன் விளைவாக மரணம் நேரும் வாய்ப்பு உள்ளது.
ஒலி என்பது ஆற்றலின் ஒரு வகை.
எப்படி
காற்று
சூரிய ஒளி
நீர்
ஆகியவை அதன் அளவிலும் வேகத்திலும் கூடும் போது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே போல ஒலியும்
அதன் அளவில் கூடும் போது
பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதுவும் பச்சிளங் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒலி அளவு கூடும் போது அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒலியின் அளவை அளப்பதற்கு
டெசிபல் எனும் அலகு உபயோகப்படுத்தப்படுகிறது.
நமது செவிகளுக்கு 40 டெசிபல் வரை ஒலி என்பது சிறந்தது.
மிஞ்சிப் போனால் 60 டெசிபல் வரை
வயது வந்தோருக்குப் பிரச்சனை இல்லை.
குழந்தைகளுக்கு 45 டெசிபல் அளவு என்பது ஓகே.
அதுவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேளைகளில் 80 dB
கார் ஹாரன் 100 dB ( தேவையற்ற ஹாரன் அடிப்பது கூட நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்)
இசை நிகழ்ச்சிகள் / காண்சர்ட்கள் / மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள்/ தியேட்டர்கள் - 110 dB - 120 dB
இடி இடிக்கும் சத்தம் / ஆம்புலன்ஸ் சத்தம் - 120 dB
ஜெட் புறப்படும் போது/ சுத்தியல் வைத்து வேலை பார்க்கும் போது - 130 dB
வெடி வெடிக்கும் போது - 140 dB வரை
குறிப்பிட்ட இந்த சம்பவத்தில்,
குழந்தையின் தாயான ரீமா தேவி
அதீத சத்தத்தால் குழந்தை மிரளுகிறது அழுகிறது. கொஞ்சம் தள்ளி வண்டியைக் கொண்டு செல்லுங்கள் அல்லது சத்தத்தைக் குறையுங்கள் என்று கேட்டிருக்கிறார். எனினும் சத்தம் குறைக்கப்பட வில்லை என்பது தெரிகிறது.
தற்போது குழந்தை இறந்த பிறகு
போலீசார் வாகனத்தை முடக்கியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலம் நாம் அறிய வருவது யாதெனில்
குழந்தைகள் / முதியவர்கள் / இதய நோயாளிகள் வாழும் பகுதிகளில்
சத்தமான ஒலியை தவிர்ப்பது சிறந்தது.
95-102 டெசிபல் இருக்கும் இந்த டிஜே
சத்தமான ஒலியை குழந்தைகள் கேட்கும் போது அவர்களது உடலில்
அட்ரினலின், நார் அட்ரினலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன.
குழந்தைகள் அதீத சத்தத்தை தங்களுக்கு நேரும் உயிர் ஆபத்தாக கருத்தில் கொண்டு
உடனடியாக அவர்களின் உடலில் இத்தகைய ஸ்ட்ரஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து விடுகின்றன.
இதன் விளைவாக,
இரத்த அழுத்தம் உயருகிறது
இதயத்துடிப்பு அதிகரிக்கிறது
இதயத்தின் தசைகள் அதிக ஆக்சிஜனை எடுத்துக் கொள்கின்றன.
இவ்வாறு தொடர்ச்சியாக நீண்ட நேரம்
நிகழும் போது
இதய பலகீனம் அடைந்து
இதய செயலிழப்பு நடக்கலாம்.
திடீரென அதீத ஒலியைக் கேட்கும் போது
குழந்தை தனது இரு கைகளை விரித்து பதட்டப்படுவது போல நடக்கும் . இதை அனைவரும் பார்த்திருப்போம்.
இதை Startle Reflex என்போம்.
அதீத ஒலிக்கு நீண்ட நேரம் ஆட்படும் போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவுகள் குறைந்து அதனால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இதே போன்று அதீத ஒலிக்கு ஆட்படும்
முதியோருக்கும் இதயத் துடிப்பில் சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே,
நமது வீடுகளில் உள்ள
குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகளை இயன்றவரை
டிஜே மியூசிக் நடக்கும் இடங்கள்,
லைவ் காண்சட்ர்கள்,
கிரிகெட் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லாமல் தவிர்ப்பது சிறந்தது.
மேலும் நமது இல்லங்களில் நடக்கும் சுப விஷேசங்களிலும் சமூகப் பொறுப்புடன் மிகக் குறைவான ஒலியுடன் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவது
குழந்தைகள்/ சுற்றத்தாருக்கு பயன்தருவதாய் அமையும்.
வழிபாட்டுத் தளங்களிலும்
தொழில் முறை இடங்களிலும்
எப்போதும் சுற்றத்தாரின் அக்கம்பக்கத்து வீட்டாரின் நலனை முன்னிறுத்தி நமது வழிபாடுகள், கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் பொது இடங்களில்
அனுசரிக்க வேண்டிய ஒலி அளவுகள் குறித்து சட்ட நிர்ணயம் செய்து
குழந்தைகள், முதியவர்களை ஒலி மாசில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நீங்கள் இருக்கும் இடத்தின் ஒலி அளவு குறித்து அறிய இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம்
Source: Sound Decibel Meter - Sound Level Meter https://share.google/HgY8Z1EJPRrm5REoW
தொடர்ந்து நீண்ட நேரம் அதீத ஒலியைக் கேட்பது நமது செவிப்புலனையும் நிரந்தர பாதிப்புக்குள்ளாக்கும்.கூடவே நமது இதயத்துடிப்பை தொடர்ந்து அதிகரித்து
அதனால் இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.
கவனத்துடன் செயல்படுவோம்
நமது பக்கம் இழப்பு நேருமுன்
விழிப்புணர்வு பெறுவோம்...
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.