Tanishq நகைக்கடை கொள்ளை ; சிக்க வைத்த Tattoo - முழு விவரம்
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை : காதலியின் ஆசையை நிறைவேற்ற 'Money Heist' பாணியில் பிளான்; காட்டிக்கொடுத்த Tattoo
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில், நிஷாந்தின் கையில் இருந்த டாட்டூதான் அவரை அடையாளம் காண்பதற்கான முக்கியத் தடயமாக அமைந்துள்ளது.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியார் மற்றும் தலைமறைவாக உள்ள நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவருக்கும் நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை காளவாசல் பைபாஸ் சாலை, நேரு நகர் நேதாஜி மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு தனி ஒருவனாகக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிஷாந்த் என்ற இளைஞரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நீதிமன்ற காவல்
இந்த கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பைக் அவரது காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சிக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் பதுக்கி வைக்க உதவியதாக நிஷாந்தின் தந்தை சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ தங்க நகைகளையும் காவல்துறையினர் மீட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் மதுரை JM-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சங்கீதா, நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி ஆகிய இருவரையும் வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடையில் கொள்ளை
அக்டோபர் 15ஆம் தேதி தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை திறக்கப்பட்டு, விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நவ.12ஆம் தேதி காலையில் ஊழியர்கள் கடையைத் திறந்தபோது, கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிக் கிடந்ததுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
Madurai Tanishq jewellery robbery caseல்
தேடப்பட்டு வரும் நிஷாந்த், கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
கொள்ளையனை காட்டிக்கொடுத்த டாட்டூ
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த நவம்பர் 1ஆம் தேதி கையில் கட்டுப் போட்டபடியும், நவம்பர் 2ஆம் தேதி தொப்பி அணிந்தபடியும் இளைஞர் ஒருவர் வாடிக்கையாளரை போல நகைக்கடைக்குள் வந்து சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகளையும், கொள்ளை நடைபெற்ற நவம்பர் 12ஆம் தேதி முகமூடி அணிந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபரின் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவரது கைகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருப்பது தெரியவந்தது.
இந்த டாட்டூவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.
மேலும், நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி, ஹெல்மெட், கையுறை அணிந்து பைக்கில் பேக்குடன் சென்ற காட்சிகளும் சிக்கின.
காதலிக்காக 'Money Heist' பாணியில் மாஸ்டர் பிளான்
தொடர்ந்து நிஷாந்த் குறித்து விசாரணை நடத்தியபோது, அவர் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் என்பதும், அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கான வீடியோ எடிட்டிங் பணிகளை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், நண்பர்களுடன் கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பைக் ரைடு செல்வது, சுற்றுலாத் தளங்களுக்கு செல்வது என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
கல்லூரியில் தன்னுடன் படித்தவரும், பிரபல இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சியை காதலித்து வந்துள்ளார். தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதற்கு போதிய பணம் இல்லாமலும், பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் காதலன் நிஷாந்திடம் தெரிவித்துள்ளார்.
காதலியின் நிலையைப் பார்த்த நிஷாந்த், அவருக்கு உதவுவதற்காக பெரிய அளவில் பணம் திரட்ட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஹாலிவுட் தொடரான 'Money Heist' பாணியில் நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு மீனாட்சியும் உதவியதுடன், கொள்ளைக்கு பயன்படுத்துவதற்காக தனது பைக்கையும் கொடுத்ததாகக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல நாட்கள் நோட்டமிட்டு அரங்கேற்றிய கொள்ளை
திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 5ஆம் தேதி நிஷாந்த் தனிஷ்க் ஜுவல்லரி கடையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாக சென்று, லிப்ட் அருகே இருந்த அவசரகாலப் பாதையை ஆய்வு செய்துள்ளார். அங்கிருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு உள்ளே சென்று, கடைக்குள் எவ்வாறு நுழைவது, எந்த வழியாக வெளியேறுவது என்பது குறித்தும் நோட்டமிட்டுள்ளார்.
பின்னர் நவம்பர் 12ஆம் தேதி நள்ளிரவு மீண்டும் அதே இரும்புச் சாரம் வழியாக மூன்றாவது தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு லிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், லிப்ட் ஷட்டர் வழியாக உள்ளே சென்று அதனை உள்புறத்திலிருந்து திறந்துள்ளார். மீண்டும் ஷட்டரைத் திறக்க முடியாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அதன் நடுவில் கம்பியை வைத்துவிட்டு, ஒவ்வொரு தளமாக இறங்கி சென்று படிக்கட்டு வழியாகத் தரைத்தளத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்.
அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து பேக்கில் வைத்துள்ளார். பின்னர் அந்த பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு, வந்த வழியிலேயே வெளியேறியுள்ளார்.
நாய்கள் துரத்தியதால் கைவிடப்பட்ட முதல் முயற்சி
நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு நள்ளிரவு 1 மணியளவில் வந்தபோது, அங்கிருந்த நாய்கள் அவரைத் துரத்தியதாகவும், இதனால் முதற்கட்ட முயற்சியைக் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மேலே சென்று திட்டமிட்டபடி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அடங்கிய பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார்.
வயல்வெளியில் எரிக்கப்பட்ட உடைகள்
இதற்கிடையே அதிகாலை தனது தந்தை சுரேஷை தொடர்புகொண்ட நிஷாந்த், தன்னிடம் ஒரு பேக் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ் அந்தப் பேக்கை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த நிஷாந்த் மீண்டும் அந்த பேக்கை எடுத்துச் சென்று பல்வேறு இடங்களில் நகைகளைப் பதுக்கி வைத்துள்ளார்.
இதையடுத்து மாடக்குளத்தில் உள்ள குடும்பத்திற்கு சொந்தமான வயலுக்கு ஆட்டோவில் சென்ற அவர், நகைக்கடைக்கு முன்பாக வேவு பார்க்கச் சென்றபோது அணிந்திருந்த உடைகள் மற்றும் கொள்ளையின்போது பயன்படுத்திய உடைகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் நகைகளை பதுக்கிவைத்துவிட்டு, அங்கிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார். பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
சிக்கிய காதலியின் பைக்
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பைக் யாருடையது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அது திருப்பாலை பகுதியைச் சேர்ந்த நிஷாந்தின் காதலி மீனாட்சிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த பைக்கைப் பயன்படுத்தித்தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எடுத்துச் சென்றதும் சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நிஷாந்தின் செல்போன் எண்ணைக் கண்காணித்த காவல்துறையினர், அவர் அவ்வப்போது செல்போனை அணைத்துவிட்டு இடங்களை மாற்றி தலைமறைவாகி வருவதைக் கண்டறிந்தனர். மேலும், காதலி மீனாட்சியைச் செல்போன் மூலமாகத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது, நகைகளைப் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
காதலி, தந்தை கைது
இதையடுத்து மீனாட்சியை கைது செய்த எஸ்.எஸ். காலனி போலீசார், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மீனாட்சியை மதுரை மாடக்குளத்தில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு சுமார் 5 கிலோ அளவிலான தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, தனிஷ்க் ஜுவல்லரியில் இருந்து எடை இயந்திரங்கள் மற்றும் நகைப் பெட்டிகள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட நகைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை திட்டம்
இந்த கொள்ளை சம்பவத்தில் நிஷாந்த் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டிருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடைக்குள் இரண்டு முறை வாடிக்கையாளரை போலச் சென்று நோட்டமிட்டதுடன், ஒருமுறை மேல்தளத்திற்குச் சென்று உள்ளே நுழையும் வழியையும், வெளியேறும் வழியையும் ஆய்வு செய்துள்ளார்.
மேலும், கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களின் மீது ஸ்பிரே அடித்துவிட்டுச் சென்றதாகவும், சென்சார்கள் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளைத் தவிர்த்து நகைகளை எடுத்து சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்துவிட்டு பைக்கில் சென்றபோது பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பாதைகளை மாற்றிச் சென்றுள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் வீடியோ எடிட்டிங் பணிகளில் அனுபவம் கொண்டிருந்த அவர், தனது திறமைகளை பயன்படுத்தி கொள்ளைத் திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
யார் இந்த மீனாட்சி
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி பட்டப்படிப்பு முடித்தவர். செல்போன் மற்றும் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் கொண்ட இவர், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு Techboss என்ற யூடியூப் தளத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் ஊதியப் பிரச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறி மற்றொரு யூடியூப் தளத்தில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, தனியாக இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான வீடியோக்களைப் பதிவிட்டு வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், புதிதாக வீடு கட்டுவது தொடர்பாகவும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். வீட்டைக் கட்டி முடிப்பதற்கு போதிய பணம் இல்லை எனப் புலம்பும் வகையிலான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவான நிஷாந்தை தேடும் தனிப்படை
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில், நிஷாந்தின் கையில் இருந்த டாட்டூதான் அவரை அடையாளம் காண்பதற்கான முக்கியத் தடயமாக அமைந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 5 கிலோ மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, மொத்தம் எத்தனை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, கொள்ளைத் திட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிஷாந்த் பல்வேறு மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது செல்போன் தொடர்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்க திட்டமிட்டு, அதற்காக பல நாட்கள் நோட்டமிட்டு, தனி ஒருவனாகக் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிஷாந்த் தற்போது தலைமறைவாகியுள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.