ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை - பாம்பனில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்
ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை
காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவு எனத் தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்
பாம்பனில் மேகவெடிப்புக்கு காரணம் என்ன? -பாலசந்திரன் விளக்கம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் அதிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிக மழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றி அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஒரு மிக குறுகிய இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச மழை பொழிந்துள்ளது. குறிப்பாக பகல் 11:30 மணியிலிருந்து 2:30 மணி வரை சுமார் மூன்று மணி நேரம் பெய்த கன மழை 19 சென்டி மீட்டர் என பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பாம்பனில் ஏற்பட்ட மேக வெடிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் 'குமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி இருக்கிறது. அரபிக்கடல் பக்கத்திலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இந்நிலையில் பாம்பன் பகுதியில் ஒரு குறுகிய இடத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே வடகிழக்கு பருவமழை அங்கு பெய்து வருகிறது. ல்டா மாவட்டங்களில் நிறைய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று 11 மணியிலிருந்து மதியம் 2:30 மணி வரை மேகக் கூட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக குறுகிய அளவில் உருவாகி கிழக்கிலிருந்து மேற்காக பாம்பன் பகுதியை நோக்கி சென்றுள்ளது. அதன் விளைவாக மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பாம்பனில் மட்டும் மேக வெடிப்பு உருவானதற்கான காரணம் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயம். அந்த பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அதிகமாக இருக்கிறது. வெப்ப இயக்கவியல் அடிப்படையில் வளிமண்டலத்தின் தன்மை எப்படி இருக்கிறது; காற்றினுடைய போக்கு; காற்றின் ஈரப்பதத்தின் குறியீடு இதையெல்லாம்தான் மேக வெடிப்பு நிகழ வாய்ப்பாக இருக்கும்' என்றார்.