கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தல் - நடைமுறைகளும், அரசாணைகளும்...

 

அரசு ஊழியர்களை  பணியிடை நீக்கம் Suspension செய்வது என்றால் என்ன?


அரசு ஊழியர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தல் - நடைமுறைகளும், அரசாணைகளும்...


அரசு பணியில் இருக்கும் போது தவறு செய்யும் ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும்.


இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது.


அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து நீக்க முடியும். எனவே துறை ரீதியான விசாரணைக்கு குற்றம் செய்தவரை உட்படுத்தவும், விசாரணை முடியும் வரை அரசுப்பணியிலிருந்து ஒருவரை தற்காலிகமாக விலக்கி வைப்பதுமே தற்காலிக பணி நீக்கத்தின் நோக்கமாகும்.


தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டவர் விசாரணை முடித்து இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை அவர் அரசுப்பணியில் பணிபுரிபவராகவே கருதப்படுவார்.


Tamilnadu civil Services (Discipline & Appeal) Rule 17(e) ன்படி, ஒருவரை தகுதியான அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.


Removal, Dismissal போன்ற பெருந்தண்டனைகளை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றங்கள் புரிந்ததாக கருதப்படுபவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கலாம். அல்லது ஒருவர் தொடர்ந்து அரசுப்பணி புரிவது இந்திய இறையாண்மைக்கோ, பொதுநலனுக்கு குந்தகமோ, பாதகமோ ஏற்படும் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கலாம்.


இருப்பினும் தகுந்த காரணமும், முகாந்திரம் இன்றி ஒருவரை தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை முடிந்தவுடன் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விதி 17(e)(6) ல் கூறப்பட்டுள்ளது.


திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் அரசு ஊழியர் ஒருவரின் மனைவி சந்தேக மரணம் அடைந்தால், காவல் நிலையத்திலிருந்து இதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அரசு ஊழியரான கணவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என Govt. Lr. No - 95405/Per-87-2 P & A. R, Date - 23.3.1988 உள்ளது.


பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஒரு அரசு ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசு கீழ்கண்டவாறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.


G. O. Ms. No - 7681, P & A. R, date - 2.7.1979


Govt. Lr. No - 94184/Per-83-5 P&A. R, date - 1.7.1985


Govt. Lr. No - 20513/Per-N/89-1 P&A. R, date - 4.3.1989


G. O. Ms. No - 439, P&A. R, date - 27.7.1989


Govt. Lr. No - 75671/Per-N /92-1, P&A. R, date - 9.12.1992


G. O. Ms. No - 37, P&A. R, date - 3.2.1995


Govt. Lr. No - 97772/N/94-1/P&A.R, date - 24.3.1995


Govt. Lr. No - 73552/N/95-3/ P&A. ஏ, date - 9.11.1995


Govt. Lr. (Ms). No - 4/N/2000/P&A.R, date - 21.7.2000


Govt. Lr. No - 198 /P&A. R, date - 29.12.2005


G. O. Ms. No - 144, P&A. R, date - 8.6.2007


Govt. Lr. No - 70374/N/2007-2/P&A.R, date - 14.3.2008


இதில் 8.6.2007 ஆம் தேதியிட்ட G. O. Ms. No - 144 என்ற அரசாணையில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் போது என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யக்கூடாது. தேவை இருந்தால் பணி ஓய்வு நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கையை துவக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு எடுக்கும் நடவடிக்கை போர்கால அடிப்படையில் இருக்க வேண்டும்.


விடுப்பில் இருக்கும் அரசு ஊழியரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். இதற்காக அவர் விடுப்பு முடிந்து பணி ஏற்ற பிறகு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இல்லை. தற்காலிக பணி நீக்கம் செய்வதால் அவர் அனுபவிக்காமல் எஞ்சியிருக்கிற விடுப்பை ரத்து செய்து அவர் எடுத்த விடுப்பை, இருப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் ஆணை தேவையில்லை.


ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதாக எதிர்காலத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவரை சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் deemed suspension ல் வைக்க வேண்டும் (F. R. 54(B)


பொதுவாக பணி அமர்த்த அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டுமே பணி நீக்கம் சம்மந்தப்பட்ட ஆணைகளை வழங்க வேண்டும். யாரெல்லாம் தற்காலிக பணி நீக்கம் செய்ய அதிகாரம் உடைய அதிகாரிகள் என விதி 13 மற்றும் 14(a)(1) ல் கூறப்பட்டுள்ளது.


இருந்தாலும் விதி 14(a)(1) ன்படி பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய பெருந்தண்டனை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றம் இருந்தால் immediate higher officer கூட தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.


தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட விவரத்தை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.


பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவர் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தாலோ அல்லது பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்க வேண்டியிருந்தாலோ "பணியமர்வு அதிகாரி" தவறு செய்தவரை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கி தற்காலிக பணி நீக்கத்திலேயே தொடர ஆணையிட வேண்டும். (F. R. 56(1)(c) மற்றும் G. O. Ms. No - 216, P&A. R, date - 1.9.1998)


நல்லதும் கெட்டதும் - இன்றைய சிறுகதை...


நல்லதும் கெட்டதும் - இன்று ஒரு சிறு கதை...


 _*நல்லதும் கெட்டதும்...*_


_வேதனைகளை ஜெயித்து விட்டால்._

_அதுவே ஒரு சாதனை தான்._


_*பிச்சைக்காரர்கள் ஒரு போதும் கோடீஸ்வரர்களைக் கண்டு பொறாமைப்படுவதில்லை.*_

_*தன்னை விட அதிகமாய் பிச்சையெடுப்போரை கண்டு தான் பொறாமைப்படுகிறார்கள்.*_


_உண்மையான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்?_

_அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்_

_உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்_

_கொட்டியும்_ _ஆம்பலும்_ _நெய்தலும் போலவே_

_ஒட்டி உறுவார் உறவு._

_*~ ஔவையார் (மூதுரை)*_


_*பொருள்:-*_ 

_ஒரு குளத்தில் நீர் நிறைந்திருக்கும் வரை கொக்குகளும் நாரைகளும் அக்குளத்தின் அருகிலே இருந்து அதனால் பயனடையும். ஆனால் குளத்தில் நீர் வற்றிவிட்டால் அவை வேறு குளத்தை நாடி பறந்து போகும். அக்குளத்தில் இருந்த தாமரை மலர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குளத்தை விட்டு பிரியாது அதனுடனே இருக்கும்._


_*அதுபோலவே நம் வாழ்க்கையிலும், இன்பங்களிலும் துன்பங்களிலும் எப்போதும் நம் அருகில் இருப்பவர்களே உண்மையான அன்பு கொண்ட உறவினர்கள்.*_


_ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!_

_அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!_


_*அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள்*_ _*இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசைப் படுகிறேன்!*_ _*ஆனால் யாரைத் தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!*_

_*நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான்.*_ 


_அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன்,_ _அதில் யார்_ _வெற்றி_ _கொள்கிறார்களோ அவர்களை_

_நீ திருமணம்_ _செய்து_ _கொள்ளலாம்._ _அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்லப் போகிறேன் என்றார்._


_*நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு. அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள். முதலில் அரசவையில் அனைவரும் அதை சுவைத்து பார்ப்போம்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!*_


_நான்கு இளவரசிகள் போட்டி போட்டுக் கொண்டு உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!_


_*முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றைத் தயார் செய்து இருந்தார்! மன்னர் சுவைத்துப் பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.*_


_இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது._


_*மூன்றாவது இளவரசி  வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!*_


_ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது, சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!_


_*முதல் மூன்று இளவரசியும்*_ _*நான்காவது*_ _*இளவரசியை பார்த்து*_ _*நகைத்தனர்!*_

_*கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!*_


_ஆனால் மன்னன்_

_நான்காவது_ _இளவரசியை தேர்ந்து எடுத்தார்!_


அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தில் இருந்தார்கள்.


_ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை அக்கறையுடன் தயார் செய்தார்!


அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பைச் சொல்லி முடித்தார்!


_உண்மையான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்_

_உண்மையான உறவு_

_"தாமரை மலர்" போல் இருக்க வேண்டும்._

 

_*எந்த ஒரு  விசயத்தையும் நாம் பார்க்கும் கோணத்திலேயே  இருக்கிறது.*_

 _*நல்லதும்  கெட்டதும்.*_


_நமது கண்கள் சரியாக இருந்தால் இந்த உலகத்தை நமக்குப் பிடிக்கும் ._

_நமது நாக்கு சரியாக இருந்தால் இந்த உலகத்துக்கு நம்மைப் பிடிக்கும்._


_*அமைதியால் நிம்மதி கிடைக்கிறதா*_

 _*இல்லை*_

_*நிம்மதியால் அமைதி கிடைக்கிறதா...*_


11 மாவட்டங்களுக்கு இ.ஆ.ப. அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு...


 11 மாவட்டங்களுக்கு  கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு G.O.Rt.No.3675 - Appointment of Monitoring Officers...


* மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் நியமனம்.


* இயற்கைப் பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, அந்த மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.


 11 மாவட்டங்களுக்கு  இ.ஆ.ப. அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து அரசாணை G.O.Rt.No.3675, Dated: 31-07-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.3675, Dated: 31-07-2024...


அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்த பரிசீலனையா - சங்கங்கள் கடும் கொந்தளிப்பு...


 அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்த பரிசீலனையா - சங்கங்கள் கடும் கொந்தளிப்பு - நாளிதழ் செய்தி...



மாணவர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையால் அதிகரிக்கும் ஆளற்ற வகுப்பறைகள்...

 


#மாணவர்களுக்குக்கேடு_விளைவிக்கும்_அரசாணையால்_அதிகரிக்கும்_ஆளற்ற_வகுப்பறைகள்!


தோழர் மணி கணேசன் பதிவு


பல் இருப்பவர்கள் பட்டாணி தின்ற கதை போல் ஆகிவிட்டது. தற்போது வரை கூவிக்கூவி நடந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஒன்றிரண்டு ஆசிரியர்களுக்கு. பதவி உயர்வுகளற்ற பொது மாறுதல் என்பது குக்கிராமங்களில், மலை கிராமங்களில், தீவு போன்ற வசதிகளற்ற ஊர்களில் படிக்கும் ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியே ஆகும். 


சபிக்கப்பட்ட வரமாக விளங்கும் 243 எனும் ஒற்றை அரசாணையினால் ஒட்டுமொத்த வக்கற்ற நிலையில் வேறுவழியின்றி அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. 


தொடக்கக்கல்வி வரலாற்றில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆசிரியர்களும் எந்தவொரு சேதாரமும் இல்லாமல் கூண்டோடு அதுநாள்வரை தாங்கள் பணிபுரிந்து வந்த பள்ளியையும் அப்பள்ளியை நம்பி வந்த அப்பாவிக் குழந்தைகளையும் அம்போவென்று அநாதையாகக் கைவிட்டு, தமக்கு எல்லா வகையிலும் வசதியான பள்ளிகளுக்குப் பறந்த கதை கொடுமையானது. 


நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி அதிகமுள்ள பெருநகரங்களில் உள்ள பள்ளிகளை இந்த பொது மாறுதலில் ஆசிரியர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு மொய்த்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இதனால் முக்கியமான நகரங்களில் உள்ள முக்கியமான பள்ளிகளில் இருந்த பணி நிறைவு, இறப்பு, விருப்ப ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் அனைத்தும் இப்போது நிரம்பி வழிகின்றன. 


அதேவேளையில், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற குக்கிராமப்புற பள்ளிகளில் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்பது போல இதுவே தக்க தருணம் என்று பலரும் ஓடிவிட்டனர். இனி தரமான கல்வி மட்டுமல்ல சமத்துவமான கல்வி கிடைப்பதும் இப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அரிதாகி விடும். இந்த அவலநிலை அடுத்து நிரப்பப்படும் புதிய பணியிடங்கள் மற்றும் கடந்த ஓராண்டாக கானல் நீர் போல் காணப்படும் பதவி உயர்வுகள் ஆகியவற்றால் மட்டுமே போக்கப்படும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக, கடந்த கல்வியாண்டு போலவே நியமிக்கப்படும் தன்னார்வ தொகுப்பூதிய ஆசிரியர்களால் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கல்வி கிடைக்கும். நிரந்தர ஆசிரியர்களால் மட்டுமே நல்ல தரமான கல்வி தொடர்ந்து கிடைக்கும் என்பதுதான் உண்மை.


பதவி உயர்வுகளற்ற இந்த அசாதாரண சூழலில் பொது மாறுதல் கலந்தாய்வு என்பதே தேவையற்றது. இதில் விடுபட்டவர்களுக்கும் ஏற்கனவே கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் மீண்டும் மற்றுமொரு கலந்தாய்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதற்கு ஈடானதாக உள்ளது. மாவட்டத்திற்கு ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே தம் சொந்த விருப்பத்தின் பேரில் பிற மாவட்டங்களில் பணி நியமனமும் பதவி உயர்வும் பெற்று ஒரு சில அசௌகரியங்களுடன் பணிபுரிந்து வருகின்றனர். 


இவர்களுள் ஒன்று அல்லது இரண்டு விழுக்காட்டினர் மட்டுமே இதன் முழுப்பலனை அனுபவித்துள்ளனர். மீதமுள்ளோர் தெரிந்த பேய்களிடமிருந்து தப்பித்து முன்பின் தெரியாத பிசாசுகளிடம் அகப்பட்டு உள்ளனர். அவர்களுள் சிலர் உரிய உகந்த உன்னத இடம் கிடைக்கப்பெறாமல் ஏமாந்து போய் நொந்துள்ளதையும் கூர்ந்து கவனிப்பது நல்லது.

ஆகா! எழுந்தது பார் ஒரு யுகப் புரட்சி என்று வெற்றுக் கூச்சலும் போலியான குதூகலமும் அப்பாவி ஆசிரியர்கள் மத்தியில் பேராசை கிளப்பும் வீணான குழப்பமும் ஏற்படுத்துவதில் ஒரு பயனும் இல்லை. இஃது ஏதோ யாரையோ யாருக்கோ ஓர் உள்நோக்கத்திற்காகக் கைப்பிடித்து, கால்பிடித்துப் பின் காக்காப் பிடிப்பது போலிருக்கிறது. 


குண்டடிப்பட்டு, குதிரை கொண்டு ஏவிய குண்டாந்தடி அடிபட்டு, சிறை அகப்பட்டு, குருதி சிந்தி உயிரை விட்டு, உதித்த போதே ஆசிரியர்கள் நலனுக்காகப் போராட்டத்தில் குதித்த, இன்றைய ஆட்சியாளர்களுக்கு அனுசரனையானவர்கள் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் பணியிலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்கப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான, இப்போதும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் செய்வதறியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கும் பழம் பெருமை வாய்ந்த அரை நூற்றாண்டுகளைக் கடக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களைச் சிதைத்து சீர்குலைத்திடும் கருப்பு அரசாணையாகவே இந்த 243 இருப்பது குறிப்பிடத்தக்கது.


மாநில முன்னுரிமை என்னும் தேன் தடவிய நஞ்சால் தற்போது முதலில் பாதிக்கப்பட்ட சமூகமாக மாணவ சமுதாயம் ஆட்பட்டுள்ளது வேதனைக்குரியது. 


இதன் அடிப்படையில் பதவி உயர்வு என்று வரும்போது தான் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் எத்தகைய கொடும் இன்னல்களுக்கு ஆளாகப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இது நடக்கவில்லையா என்று பலர் வினவுவது புரியாமல் இல்லை. 


பள்ளிக்கல்வியின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோடு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை ஒருபோதும் ஒப்பிட முடியாது. வாகனப் புகை படியாத எளிதில் போக முடியாத எத்தனையோ இருண்டு கிடக்கும் குக்கிராமங்களில் தொடக்கப்பள்ளிகளே சிமிழி வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது. 


பண்டைத் தமிழ்ச் சமூகம் பாகுபடுத்தி வைத்திருக்கும் ஐவகை நிலங்களில் எல்லோரும் தம்மைப் புதிய சூழலுக்குத் தகவமைத்துக் கொண்டு வாழ்வது என்பதும் உழைப்பது என்பதும் அவ்வளவு எளிதான செயலல்ல. 


இவற்றையெல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு தான் முன்னோர்கள் படித்த, தகுதிவாய்ந்த அந்தந்த மண்ணின் மைந்தர்களை அந்தந்த பகுதிப் பள்ளிகளில் முடிந்தவரை பணியமர்த்தி வந்துள்ளது எண்ணத்தக்கது.


ஒன்றிய முன்னுரிமை என்பது இந்த அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டது. சொந்த வட்டார வழக்கில் தம்முடன் மிக அணுக்கமாகவும் இணக்கமாகவும் மொழியளவிலும் கருத்தளவிலும் தொடர்பு கொள்பவர்களைக் கூட மனத்தளவில் பகுதியளவு மட்டுமே தம் இரண்டாம் பெற்றோராக ஆசிரியர்களைக் குழந்தைகள் ஏற்கத் துணிவது அறியத்தக்கது. வளர்ப்பு விலங்குகளிடம் காணப்படும் மனிதர்கள் மீதான பயமற்ற தன்மை இன்றளவும் மனிதர்கள் கொஞ்சி வளர்க்கும் பறவைகளிடத்தில் காண்பது அரிது. அவை மனிதர்களை மனிதர்களாகத் தான் உற்றுநோக்கி வருகின்றன. 


குழந்தைகளும் அவ்வாறே என்பதை குழந்தை உளவியல் வழி உணரவியலும். மொழி அளவில் வேறுபடுபவர்கள் அனைவரும் அவர்களைப் பொறுத்தவரை வேற்றுக் கிரகவாசிகளாகவே நினைக்கப்படுவர். வேற்று மாவட்ட ஆசிரியர்களின் பேச்சு வழக்குகள் அனைத்தும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளூர புரிந்தவை கேலிப் பொருளாகவும் புரியாதவை வெறுப்பு உணர்ச்சியாகவும் சிறுவர் சிறுமியரிடம் வெளிப்படுவது இயல்பு. 


முதலில் ஆசிரியர்கள் தம்மை இத்தகைய சூழலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வதென்பது மிகவும் சிக்கலான, சிரமமான காரியமாகும். குறிப்பாக, நுகத்தடி மாந்தர்களாகப் பழக்கப்படுத்தப்பட்ட இந்நாள் மற்றும் எதிர்கால இல்லத்தரசிகள் குடும்பத்தையும் குழந்தைகள் வளர்ப்பையும் பெற்றோர்கள் கவனிப்பையும் சுகமான சும்மாடாகத் தலையில் தூக்கிச் சுமக்கும் பெண் ஆசிரியர்கள் மாவட்டம் கடந்த பதவி உயர்வுகளை எந்த அளவிற்கு வரவேற்று புன்முறுவலுடன் ஏற்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போதுதான் அதற்கான இக்கட்டான சூழல் நேர்ந்திருக்கிறது. 


ஒரு கடற்கரைவாசி திடீரென்று மலைவாசியாகவோ, ஒரு மலைவாசி நொடிப்பொழுதில் சமவெளிவாசியாகவோ, ஒரு சமவெளிவாசி எல்லாவற்றையும் கணப்பொழுதில் இழந்து வறண்ட நிலவாசியாகவோ ஒப்பற்ற ஓர் அரசாணை மூலம் நிர்வாக மாறுதல் மற்றும் பதவி உயர்வு காரணங்களால் எந்த அளவிற்கு இமைக்கும் பொழுதில் உருமாற முடியும் என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் உள் மற்றும் நுண் அரசியலைச் சற்றும் புரிந்துகொள்ள விரும்பாத நுனிப்புல் மேய்ந்து ஆன்ம திருப்தி கொள்பவர்கள் ஒன்றை உணர்வது நல்லது. 


இந்த அரசாணையால் அனைத்து முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விட்டன. இனி அரசின் இரும்புக் கரங்கள் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உபரிகள் என்றோ உதிரிகள் என்றோ அரசுக்கு எதிரானவர்கள் என்றோ தண்ணீரில்லாத காட்டுக்கு மட்டுமல்ல முன்பின் பழக்கமில்லாத மேட்டுக்கும் நிர்வாகம் சார்பில் தூக்கி எறியலாம். இது நடக்காது என்று இப்போது மார்தட்டிக் கொண்டிருக்கும் குய்யோ முறையோ சாலராக்கள் உறுதிபட சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி. இந்தப் புதுச் செருப்பு மிகவும் வித்தியாசமானது. புதிதில் கடிக்காது. போகப்போகத் தான் தம் கோர முட்களைக் காட்டப் போகின்றது.


இதனால் மூத்தோர் இளையோர் ஒப்பீட்டு ஊதிய முரண்பாடு களைதல், பதவி இறக்கம் இல்லாமல் பணியிட மாறுதல் நிகழ்தல், முன்னுரிமை இழக்காதத் தன்மை, விரும்பியவாறு விரும்பும் இடத்திற்கு இடம் பெயர்தல் முதலான நன்மைகள் இல்லாமல் இல்லை. இவையனைத்தும் விதிவிலக்குகள். இதனைப் பொதுமைப்படுத்துதல் ஒருபோதும் இயலாது.


இருக்கின்ற பள்ளியில் இருக்கின்ற பணிகளை முடிக்கவே நேரம் கிடைக்காத நிலையில் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளையும் அவற்றின் நிதி மேலாண்மைகளையும் கவனித்துக் கொள்ளும்படி கூடுதல் பொறுப்பை வழங்குவது என்பது பணிச்சுமையேயாகும். மாணவர் பாதுகாப்பை அதிகம் வலியுறுத்தும் இந்தக் காலகட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் குறைந்த தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட இருக்கும் தற்காலிக ஆசிரியர்களின் கவனக்குறைவால் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் இழப்புகளுக்கும் பொறுப்பு ஏற்பது யார்? 


ஒரு நிரந்தர ஆசிரியரை இதுகுறித்து தண்டிக்க ஏராளமான வழிவகைகள் உள்ளன. அவர்களது அத்தனைக் குடுமியும் அரசின் கையில் உள்ளது. வெறும் கல்வித் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நிரந்தர ஆசிரியருக்கு கல்வித் துறையால் திட்டமிட்டு வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிகள் ஏதும் வழங்கிட சாத்தியம் இல்லாத நிலையில் தரமான கல்வி கிடைக்கச் செய்வது என்பது முயற்கொம்பே ஆகும். 


தலைமையாசிரியரே இல்லாத பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் பள்ளிகளின் கல்வி பயிலும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை எண்ணிப்பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது. அதற்காக அத்தகையோர் மோசமானவர்கள் என்று வாதிடுவது இங்கு நோக்கமல்ல. 


அசாதாரண சூழலில் நிகழும் அசாதாரண நிகழ்வுகளுக்கும் பள்ளித் தளவாடங்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பொறுப்பேற்பது யார் என்பதுதான் இங்கு கேள்வி.

 650 க்கும் மேற்பட்ட மேனிலைப் பள்ளிகள், 425 க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 1900 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட  அரசுப் பள்ளிகள் இப்போது தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் வழி அறிய முடிகிறது. 


இதுதவிர, தொடக்கக்கல்வித் துறையில் மட்டும் 1850 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 4450 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பல்வேறு காரணங்களால் காலியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய பள்ளிகளில் படிக்கும் பத்து, பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளோர், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வில் கலந்து கொள்வோர், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள 1 - 5 வகுப்பு குழந்தைகள் நிலை குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இங்குள்ள அனைவருக்கும் உள்ளது.

பதவி உயர்வுகள் வழியும் புதிய பணியிடங்கள் நிரப்புதல் வழியும் அனைத்தும் சரியாகி விடும் என்று பரப்புரை செய்யவும் அச்சமாக இருக்கிறது. ஏனெனில், கடந்த 2014 க்குப் பின்னர் முறையான பணி நியமனம் தோற்றுவிக்கப்படவில்லை. 


சலித்து சலித்து எடுக்கப்பட்ட உபரி பணியிடங்களைத் தொடர்ந்து பணிநிரவல் செய்து நிரப்பியது போக எஞ்சியிருக்கும் காலிப்பணியிடங்கள் புள்ளிவிவரங்கள் தாம் மேற்சொன்னவை ஆகும். இதில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஒன்றும் தப்பவில்லை. கடந்த கல்வியாண்டு முதல் இந்த நொடி வரை பதவி உயர்வுகள் எட்டாக் கனியாகவே இருந்து வருவது வேதனைக்குரியது. 


தொடர்ந்து நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி கொள்கை முடிவெடுத்து அறிவிக்கும் பல நல்ல வாய்ப்புகள் இருந்தும் ஏனோ நாடு போற்றும் திராவிட மாடல் அரசைப் பற்றி ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித காழ்ப்புணர்ச்சியும் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும் வகையில் அதிகார வர்க்கம் தவறான வழியில் வழிநடத்தி உரிய காலத்தில் உகந்த தீர்வு எட்டப்படுவதை விரும்பாமல் காலம் கடத்துகிறதோ என்று பலவாறு கருதுவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டுவதோடு அல்லாமல் பலவகையான போராட்டங்களை முன்னின்று நடத்துவதன் வழி அறிய முடிகிறது. 


இந்த அரசாணையால் குறுகிய காலத்தில் கலந்தாய்வில் கலந்துகொண்டு பலன் அடைந்தவர்களைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். குறிப்பாக, மாணவர்கள். அனுமார் வால் போன்று நீண்டு கொண்டே செல்லும் பணி மாறுதல் கலந்தாய்வும் கூடவே தள்ளிக்கொண்டே போகும் பதவி உயர்வுகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த வழக்குகளும் தீர்ப்புகளும் ஒருவழியாக முடிவுக்கு(?)  வரும்போது ஆளற்ற வகுப்பறையில் மாணவர்கள் முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கொடுமையை என்னவென்பது?


கடந்த இரண்டு கல்வியாண்டாக தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் குவிந்து கிடந்த காலிப்பணியிடங்களுக்கு, குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாகப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைத்திட்ட அரசாணை 243 அடிப்படையில் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வை, புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பை மட்டுமே ஒற்றைக் கோரிக்கையாக முன்னிறுத்தியவர்களும் சம வேலைக்கு சம ஊதியம் அடைந்தே தீருவோம் என்று ஒற்றை முழக்கத்தை ஓங்கி ஒலித்தவர்களும் அரசியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பரிப்பதைப் பார்க்கவே வேதனையாக உள்ளது. 


முடிவாக, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாக அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலம் அலங்கோலமாக ஆனதுடன் சிறைப்பட்டுச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பொருள்: பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.


பழமொழி :
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

Justice stays long, but strikes at last


இரண்டொழுக்க பண்புகள் :

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.


பொன்மொழி :

தலை குனிந்து என்னை பார். தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன்.----புத்தகம்.


பொது அறிவு :

1. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்?


விடை: மாலிக்

2. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை

விடை: வில்லுப்பாட்டு



English words & meanings :

review-விமர்சனம்,

analyse-பகுப்பாய்வு


வேளாண்மையும் வாழ்வும் :

இனி விதைக்க உகந்த மாதங்கள் குறித்து பார்ப்போம். பழமொழியே உண்டு. “ஆடி பட்டம் தேடி விதை!” என்பதே ஆகும் .



ஆகஸ்ட் 05

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது.


 
நீதிக்கதை

சிங்கமும் தந்திரமான முயலும்

முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி  காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.

அதற்கு  முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.

முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.

“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க”  என்று சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.

மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக  சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை  மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது.

அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது.

அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன! என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவை கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது.

“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக  முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.

முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகச் சந்தோஷம் அடைந்தனர்.

நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது.



இன்றைய செய்திகள்

05.08.2024

⚡மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

⚡தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: நெல்லைக்கு புதிய காவல் ஆணையர் நியமனம்.

⚡தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்து.

⚡வயநாடு நிலச்சரிவு பலி 361 ஆக அதிகரிப்பு: சூரல்மலா, முண்டக்கை, அட்டமலாவில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

⚡தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

⚡அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவதால் மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்.

⚡பாரீஸ் ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

⚡பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

⚡The Sports Minister inaugurated the operation of 100 new and refurbished buses including 58 low-floor buses for the benefit of disabled persons.

⚡Transfer of 17 IPS officers across Tamil Nadu: New Police Commissioner appointed for Nellai.

⚡The Chennai Meteorological Department has said that there is a possibility of heavy rain at a few places in Tamil Nadu today and tomorrow.

⚡Wayanad landslide death toll rises to 361: Sooralmala, Mundakai, Attamala are in a state of survival.

⚡The Union Cabinet has approved 8 projects worth Rs.50,655 crore to improve the national highway infrastructure.

⚡Sudden war tension in Middle East countries as US warships and planes rush.

⚡Paris Olympics: Indian team advances to the Hockey semi-finals

⚡Paris Olympics Badminton: India's Lakshya Sen  looses to victor  axelson.

Prepared by

Covai women ICT_போதிமரம்


TETOJAC சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற DPI தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...

 

டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற டி.பி.ஐ தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


04.08.2024


*மூன்று நாட்கள் பேரெழுச்சியுடன் நடந்த டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டம்!*


*பள்ளிக்கல்வித்துறைச் செயலருடன் சுமூகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்!*


*டிட்டோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு!*


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024, 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகமான டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென 14.07.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், டிட்டோஜாக்கில் இணைந்துள்ள 12 ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள், டிடோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 12 இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 12 இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும் கண்துஞ்சாது களப்பணியாற்றினர். மூன்று நாட்கள் டி.பி.ஐ முற்றுகைப் போராட்டம் என்ற கடுமையான களப்போராட்ட முடிவிற்கு டிட்டோஜாக் பேரமைப்பு ஏன் வந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இப்படியொரு களப்போராட்டத்தை நடத்த டிட்டோஜாக் முடிவெடுக்கவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.


30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு வட்டார அளவில், மாவட்ட அளவில் பல போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது. கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் 13.10.2023 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்படத் தயாரான நிலையில், கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த 12.10.2023 அன்று மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்தார். 


அமைச்சரது அழைப்பின் பேரில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் போராட்டத் தேதிக்கு முதல் நாள் மாலை பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். இப்பேச்சுவார்த்தையில் மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றார்கள். 1 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகள் தொடர்பாகவும் ஒவ்வொன்றாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆணைகள் வெளியிடப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


இதனடிப்படையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு டிட்டோஜாக் பேரமைப்பு 13.10.2024 அன்று சென்னையில் நடத்தவிருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை ஒரு நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்த முடிவெடுத்தது. அதன்படி 13.10.2023 காலை 10 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரும் அக்கூட்டத்தில் பங்கேற்று முதல் நாள் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக பொதுமேடையிலேயே அறிவித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் நியாயமான 30 கோரிக்கைகளில் முதற்கட்டமாக கோரிக்கைகளாவது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


ஆனால், இந்நிகழ்விற்குப் பின்பு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித ஆணைகளும் தொடக்கக்கல்வித்துறையால் பிறப்பிக்கப்படவில்லை. டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக பலமுறை முயன்றும் ஆணைகளைப் பெற இயலவில்லை.


இந்தச் சூழலில் தான் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் முன்னுரிமையைப் பாதிக்கும் வகையிலும், பதவி உயர்வைப் பாதிக்கும் வகையில் ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்தும், குறிப்பாகத் தொடக்கக்கல்வித் துறையில் மிகப்பெரும்பான்மையாகப் பணியாற்றும் 80 சதவீதப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையிலும் அரசாணை: 243 நாள்: 21.12.2023 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வெளிவரும் என்று எதிர்பார்த்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அரசாணை: 243 வெளியிடப்பட்டது தலையில் இடிதாக்கியதைப் போன்று இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பு அரசாணை 243 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி 19.02.2024 அன்று சென்னையில் மாபெரும் உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அரசாணை 243 தொடர்பாக டிட்டோஜாக் பேரமைப்பை அன்றைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி 20.02.2024 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் கலந்து கொண்டார்கள். 1 மணி 30 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்பு மீண்டும் ஒருமுறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசுவதாகவும் கூறினார். ஆனால், இறுதிவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமலேயே அரசாணை 243ன் படி பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த ஆணை பிறப்பித்தார்.


பொதுவாக ஒரு துறையில் வெளியிடப்படும் அரசாணை என்பது அந்தத் துறையின் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும், அந்தத் துறையின் பயனாளிகளுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அதற்கு நேர் மாறாக அரசாணை 243 வெளியிடப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 5 சதவீத ஆசிரியர்களுக்குக் கூட பயன்தராத ஒரு அரசாணையை, 95 சதவீத ஆசிரியர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையை, மாணவர்களின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ வெளியிட்டு விட்டு, இந்த அரசாணை ஆசிரியர்களுக்குப் பயன் தரக்கூடியது என்று தொடக்கக்கல்வித்துறைக்குச் சம்பந்தமில்லாத சில ஆசிரியர் சங்கங்கள் கூறுவதைச் சரி என்று ஏற்றுக் கொண்டதால் அது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என டிட்டோஜாக் பேரமைப்பு கருதுகிறது.


எனவேதான் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் என்பது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மீது திணிக்கப்பட்ட போராட்டம் என்று டிட்டோஜாக் பேரமைப்பு கூறுகிறது.


எனவேதான் மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாய், குறிப்பாகப் பெண்ணாசிரியர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் களத்தில் நின்று போராடினர்.


முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவிவிட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு டெஸ்மா, எஸ்மா காலத்தில் கூட இல்லாத அளவிற்கு ஆசிரியர்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணி செய்து கொண்டிருந்தபோதே காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு என்பது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக விழுந்துவிட்டது. சங்கப் பொறுப்பாளர்களை கொடுங்குற்றவாளிகளைப் போல நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நிகழ்வு என்பது எந்த சட்டப்பிரிவின் கீழ் சரியானது என்பதை தமிழக அரசுதான் கூற வேண்டும். அதேபோன்று முற்றுகைப் போராட்டத்திற்கு வாகனங்களில் வந்த பெண்ணாசிரியர்களை கண்ட இடத்தில் நிறுத்தி மண்டபங்களில் இரவு முழுவதும் சிறை வைத்த நிகழ்வும் சட்டவிரோத நிகழ்வுகளாகும். அதேபோன்று கல்வித்துறை அலுவலர்கள் மூலம் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தால் "ஊதியத்தைப் பிடிப்போம்" என்றும் "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் மிரட்டிய செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். இத்தனை இடர்களையும் தாண்டி, தடைகளைத் தகர்த்து சென்னைக்கு வருகை தந்த ஆசிரியர்களை ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், கண்ட இடங்களிலும் கைது செய்தது காவல்துறை. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் என்றால் ஆசிரியர்களின் கோபத்தையும், நியாயத்தையும், போராட்ட வலிமையையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி முதல் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இரண்டாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றார்கள் என்பதுதான் போராட்டத்தின் வெற்றி, டிட்டோஜாக் பேரமைப்பின் வலிமை.


அதுமட்டுமல்ல டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் தான் டிட்டோஜாக் அறிவித்தது. அதனை ஏற்று மாநிலம் முழுவதும் மூன்று நாட்களில் கல்வித்துறை அலுவலர்களின் அச்சுறுத்தலையும் மீறி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தார்கள் என்பது டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக் கோரிக்கைகளின் மீது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ள ஆதரவு நிலையை வெளிப்படுத்துகிறது. பல மாவட்டங்களில் பெரும்பாலான ஒன்றியங்களில் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில் அன்றையதினம் பள்ளிகளை நடத்த இயலாத நிலை தான் ஏற்பட்டது. எனவே, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக டிட்டோஜாக் மட்டுமே உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.


மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் இரண்டு முறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசினார். 22.07.2024 அன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையிலும் அனைத்துக் கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்து கொண்டு சாதகமான முறையில் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்திரவாதமான அறிவிப்புக்கள் இல்லாததால் கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொண்டு முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்தது.


அதன்பின்பு முதல் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் 30.07.2024


அன்று இரண்டாவது முறையாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதனடிப்படையில் 30.07.2024 அன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும், புதிதாகப் பொறுப்பேற்ற தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றனர். அரசாணை 243 தொடர்பாக விரிவாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செயலாளர் அவர்கள், டிட்டோஜாக் அமைப்பின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும், குறிப்பாக 12.10.2023 அன்று டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.


பேச்சுவார்த்தையின் முடிவில் தான் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான ஆணைகள் வெளியிட ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வேண்டும் எனவும், கோரிக்கைகள் தொடர்பாக தன்னை மீண்டும் வந்து சந்திக்குமாறும் தெரிவித்தார். இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதமான அறிவிப்பேதும் இல்லாத சூழலில் மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் தொடரும் என மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு அறிவித்தது.


மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்று முடிந்த நிலையில் 31.07.2024 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மூன்று நாள் முற்றுகைப் போராட்ட நிகழ்வுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுறுதியோடு போராட்டக் களத்திற்கு வருகை தந்து களப்போராளிகளாகக் களத்திலே நின்று போராட்டத்தை வெற்றியடையச் செய்த ஆசிரியர்களுக்கும், போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிய டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகளுக்கும் மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் சிறப்பான அணுகுமுறை மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சூழல் ஆகியவற்றை விரிவாக விவாதித்த மாநில உயர்மட்டக்குழு எதிர்வரும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி டிட்டோஜாக்கின் அடுத்த கட்ட செயல்பாடுகளைத் தீர்மானிப்பதென முடிவு செய்துள்ளது. டிட்டோஜாக் பேரமைப்பைப் பொறுத்துவரை முன்வைத்துள்ள 31

கோரிக்கைகளும் நியாயமானவை. எனவே, 31 கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என டிட்டோஜாக் வலியுறுத்துகிறது.


 குறிப்பாக அரசாணை 243 முற்றிலுமாக ரத்து செய்வதையே டிட்டோஜாக் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளுக்கான ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இதுவே டிட்டோஜாக் பேரமைப்பின் உறுதியான நிலைப்பாடு. நம் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு உரிய காலத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் டிட்டோஜாக் பேரமைப்பு இறுதி வரை உறுதியாகக் களத்தில் நின்று போராடும்.


*டிட்டோஜாக் மாநில அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை.*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...