பழைய ஓய்வூதியம் மற்றும் புதிய ஓய்வூதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் - முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார்?
OPS, CPS, UPS Differences
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தெளிவாக விளக்குகிறது கீழேயுள்ள பதிவு.
அதன் முழுமையான விவரங்கள் இதோ:
1. பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
அமலாக்கம்: மத்திய அரசில் 1.4.2004-க்கு முன் அதாவது 31-03-2004 வரை (தமிழ்நாட்டில் 31-03-2003 வரை மட்டுமே).
யாருக்கு: 2003-க்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.
ஓய்வூதியத் தொகை: கடைசி மாதச் சம்பளத்தில் 50% வரை உறுதியாகக் கிடைக்கும்.
பங்களிப்பு: ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து எவ்விதத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும்.
இதர பலன்கள்: அகவிலைப்படி (DA) உயர்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும்.
சவால்: இது அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
2. புதிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( NPS / CPS)
அமலாக்கம்: 2003-க்குப் பிறகு (தமிழ்நாட்டில்)
யாருக்கு: 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு.
ஓய்வூதியத் தொகை: இது முதலீடு சார்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் பங்குச்சந்தை லாபத்தைப் பொறுத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது.
பங்களிப்பு: ஊழியர் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். மத்திய அரசு 14% பங்களிப்பு வழங்கும் (தமிழ்நாடு அரசின் பங்களிப்பு தற்போது வரை 10% மட்டுமே)
இதர பலன்கள்: மத்திய அரசு பணியில் ஓய்வு பெறும்போது 60% தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40% மட்டுமே மாத ஓய்வூதியமாக வரும். அகவிலைப்படி உயர்வு கிடையாது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் CPS திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்துடன், தனது பங்களிப்பையும் சேர்த்து ஓய்வு பெறும் நாள் அன்று வரை உள்ள தொகைக்கு 7.1% வட்டியுடன் மொத்தமாக வழங்கி விடுகிறது.
சவால்: பங்குச்சந்தை அபாயம் உள்ளது; அரசு ஊழியர்களுக்கு தனது பணமும் சேர்ந்து பறிபோகும் வாய்ப்புள்ளது என்பதால் இதில் துளியும் விருப்பம் இல்லை.
3. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)
அமலாக்கம்: 2024-25 (மத்திய அரசின் முன்மொழிவு).
யாருக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு (மாநில அரசுகள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம்).
ஓய்வூதியத் தொகை: உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள்.
பங்களிப்பு: ஊழியர் பணம் பங்களிப்பு செய்ய வேண்டும். அரசு தனது பங்களிப்பைத் தொடரும்.
இதர பலன்கள்: குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நிலைப்பாடு: இது அரசுக்கும் ஊழியருக்கும் இடையிலான ஒரு நடுத்தர சமரசத் திட்டமாக இது கருதப்படுகிறது. முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இறுதியாக : தமிழ்நாட்டில் மத்திய அரசை பின்பற்றி, அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
ஒரு சிலர் பணி ஓய்வுக்காலம் பாதுகாப்பாக அமைய வேண்டும் எனும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 06-01-2025 அன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருமித்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே கிடைத்துள்ளது என்பதால் அவர்களின் நியாயமான கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொள்வார் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.